புதுடெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக இந்தியாவில் 42.10 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ இதழான லேன் செட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் பேர் கரோனாவால் இறந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், கரோனா தொற்றால் பல லட்சம் பேர் இறந்துள்ளதாக ராகுல் உட்பட பலர் குற்றம் சாட்டினர்.
ஆனால், இந்தியாவில் பிறப்பு, இறப்பை பதிவு செய்யும் நடைமுறை வலுவாக உள்ளது. இதில் உயிரிழப்புகளை மறைக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவ இதழான லேன்செட் நடத்திய ஆய்வில் கூறியருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி லட்சக்கணக்கானோரை பாதித்தது. இதனால் இதுவரை அங்கு 5.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2021-ம் ஆண்டு இந்தியாவில் தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டது.
இதனால் அங்கு உயிரிழப்பு வெகுவாக குறைந்தது. 2021-ம் ஆண்டில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தியதால் அங்கு சுமார் 42.10 லட்சம் பேரின் மரணம் தடுக்கப்பட்டது. இந்த ஆய்வை நடத்திய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் ஆலிவர் வாட்சன் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தை கொண்டு வந்திருக்காவிட்டால் கூடுதலான உயிரிழப்புகள் அங்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருந்தது. தொற்றால் 43.70 லட்சம் பேர் வரை இந்தியாவில் மரணிக்கும் சூழல் இருந்தது. இதை தடுப்பூசிகள் மாற்றி அதிக அளவிலான மரணத்தை தடுத்துவிட்டன.
2021-ம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40% மக்கள் தொகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்கள் மூலம் தடுப்பூசி போட வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) இலக்கை எட்டியிருந்தால் மேலும் 5,99,300 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்” என்றார்.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று தொற்றுநோயியல் பிரிவு பேராசிரியர் அஸ்ரா கனி கூறும்போது, “உலகளாவிய ரீதியில் கரோனா தாக்குதலால் இறப்புகளைக் குறைப்பதில் தடுப்பூசிகள் செய்த மகத்தான நன்மையை எங்கள் ஆய்வு நிரூபிக்கிறது.
தொற்றுநோய் மீதான தீவிர கவனம் இப்போது மாறியுள்ள நிலையில், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், கரோனா வைரஸின் தற்போதைய புழக்கத்தில் இருந்தும், ஏழைகளை தொடர்ந்து பாதிக்கும் மற்ற பெரிய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வது முக்கியம்” என்றார்.