தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கான அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களைச் சேகரிக்க கல்லூரிகளில் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், அனைத்துப் பதிவாளர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்தத் திட்டத்துக்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள் கோரப்படுவதாக தெரிவித்துள்ளார்.