இந்திய – தமிழக அரசின் உதவிப்பொதிகள் தாங்கிய இரண்டாவது பாரிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
எமது மக்களுக்காக தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாணயத்தில் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி மிக்க மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
14,700 மெட்ரிக்தொன் அரிசி, 250 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 38 மெட்ரிக்தொன் மருந்துப்பொருட்கள் அடங்கிய பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் பிணைப்பினை சுட்டிக்காட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளின் நலன்களில் இந்திய மக்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.