சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,359 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று வேகமாக பரவுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்த நகர்ப்புற மேம்பாட்டுக் கழக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரிக்கிறது. இந்தியாவிலும் தொற்று பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லா நாடுகளிலும் ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை வைரஸ்தான் பரவி வருகிறது.
தமிழகத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. இதில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாதவர்களை, அரசின் கண்காணிப்பு மையத்தில் தங்கவைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கரோனா கண்காணிப்பு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள மருத்துவமனையை மீண்டும் கரோனா மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கிறது.
தொற்று அதிகரித்து வந்தாலும் உயிரிழப்பு இல்லை. தொற்று ஏற்படுபவர்களுக்கு மிதமான காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, சளி போன்ற உபாதைகள் மட்டுமே ஏற்படுகின்றன. எனினும், தொற்றுவேகமாக பரவுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதன்மூலம் பள்ளிகளில் மற்ற குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படும்.
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இன்னும் வரவில்லை. கரோனா தொற்றை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கடந்த வாரம் வரை தினமும் 12 ஆயிரம் என்ற அளவில் செய்யப்பட்டது. தற்போது தினமும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சையில் 5,912 பேர்
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 724, பெண்கள் 635 என 1,359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 616, செங்கல்பட்டில் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 621 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 5,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு தமிழகத்தில் 1,063, சென்னையில் 497 ஆக இருந்தது.