வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றம், சட்டபூர்வமான கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து, கருக்கலைப்பு செய்வதை குற்றமாக்கும் வரைவு ஒன்றை இயற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், 1973-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில், ‘கருக்கலைப்பு என்பது, பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அரசியலமைப்பு உரிமை’ என தீர்ப்பு வழங்கியது.இதன்பின், ௧௯௯௨ல் மற்றொறு வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை, சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என, தெரிவித்தது.
கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், அமெரிக்காவில் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து 98 பக்க வரைவு கருத்து ஒன்றை, உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ வெளியிட்டுள்ளார். ‘பொலிட்டிக்கோ’ என்ற செய்தி இணையதளத்தில், நீதிமன்றத்தின் கருத்து என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘கருக்கலைப்புக்கு சாதகமான அனுமதிகள் நிராகரிக்கப்பட வேண்டும். கருக்கலைப்பு செய்வதை குற்றமாக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு சட்டமானால், அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, அமெரிக்காவில் உள்ள பெண்கள் மற்றும் சமூகநலச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement