புதுடெல்லி: ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கவுதம் அதானி தனது 60-வது பிறந்த நாளன்று சமூக நலத் திட்டங்களுக்காக ரூ. 60 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தத் தொகை அதானி அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என அதானி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் நிறுவனங்கள் வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகை நன்கொடை யாக வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. முதல் தலைமுறை தொழில்முனைவோரான கவுதம் அதானி தனது 60-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியதன் மூலம் சர்வதேச அளவிலான கொடையாளிகளாகக் கருதப்படும் மார்க் ஜுகர்பெர்க், வாரன் பஃபெட் வரிசையில் கவுதம் அதானியும் சேர்ந்துள்ளார்.
அறக்கட்டளையை அதானியின் மனைவி பிரீத்தி அதானி நிர்வகிக்கிறார். இது 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை 37 லட்சம் கிராம மக்களை சென்றடைந்துள்ளது. இதுவரை 16 மாநிலங்களில் 2,409 கிராமங்களில் இந்நிறுவனம் தனது சேவையை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் இக்குழுமம் ஊடகம், டிஜிட்டல் சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறை களிலும் தடம் பதித்துள்ளது.