பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மற்ற பாடங்களில் வருடாவருடம் கணிசமான மாணவர்கள் சென்டம் எடுத்தாலும், தமிழ்ப் பாடத்தில் சென்டம் வாங்குவது என்பது பலருக்கும் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
காரணம், நமது தாய்மொழிதான் என்றாலும் ஒற்று, சந்திப்பிழை, கருத்துப் பிழை, வாக்கிய பிழை என்று தமிழில் நூறு மார்க் வாங்குவதற்கு ஏக தடைகள் இருக்கும். அத்தனை தடைகளையும் தனது அயராத பயிற்சி மற்றும் முயற்சியால் கடந்து, பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்றுச் சாதித்திருக்கிறார் ஸ்ரீராம்.
ஸ்ரீராம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். இவர், அருகிலுள்ள குப்பாண்டாபாளையத்தில் இயங்கிவரும் ஒரு தனியார்ப் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இவரது தந்தை வனராஜ் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் பணிபுரிகிறார். தாய் மணிமாலா, அரசுப் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். தமிழில் முழு மதிப்பெண்ணையும் பெற்றுச் சாதித்த மகிழ்ச்சியிலிருந்த ஸ்ரீராமைச் சந்தித்துப் பேசினோம்.
“எட்டாவது முதல் இந்தப் பள்ளியில் படிச்சுட்டு வந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்து ஆங்கிலத்தில்தான் ஆர்வம் அதிகம். ‘ஆங்கில பிரசன்டேஷன் நல்லா இருக்கு’ன்னு நான் பத்தாவது படிக்கும்போதே, என்னோட ஆங்கில ஆசிரியர்கள் ஜெயந்தி மேடமும், மகேஸ்வரி மேடமும் சொல்வாங்க. அதனால், பத்தாவது ஆங்கில பாடத்தில் 95க்கு குறையாம வாங்குவேன். ஆனால், தமிழ்ல 80யைத் தாண்டமாட்டேன். பத்தாவது இறுதிதேர்வு கொரோனாவால நிறுத்தப்பட்டதால, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் வாங்கிய மார்க் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்தாங்க. அப்போ, ஆங்கிலத்தில் 91 கிடைச்சுச்சு. தமிழ்ல 85தான். பத்தாவதுல எனது தமிழ் மிஸ்ஸா இருந்த கவிதா மேம், ‘ஆங்கிலம் போல உன்னால தமிழ்ப் பாடத்துலயும் நிறைய சாதிக்க முடியும்’னு உற்சாகப்படுத்தினாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை வரலை. இந்த நிலையில்தான், பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் டீச்சர் தமிழ்செல்வி அம்மா கொடுத்த உற்சாகமும், ஊக்கமும்தான் என்னை தமிழ்ல 100 மதிப்பெண் எடுக்க வச்சுருக்கு. அவங்க அவ்வளவு அழகா செய்யுள், பாடங்களை நடத்துவாங்க. பாட்டுப் பாடி பாடம் நடத்துவாங்க. அதனால, எனக்குத் தமிழ்ப் பாடம் மீது பெரிய காதல் வந்தது. அவங்க நடத்துற பாடத்தின் கதாபாத்திரமாகவே நான் மனதில் மாற ஆரம்பிச்சேன்.
வாராந்திர டெஸ்ட், ஒற்றுகள், சந்திப்பிழை, இலக்கணம்ன்னு சக விஷயத்திலும் அவங்கத் தொடர்ந்து டெஸ்ட் வச்சாங்க. அதோட, ‘தெளிவா படி. தமிழைப் புரிஞ்சுக்கிட்டு படி. வாக்கிய அமைப்புகள், சொற்றொடர்களைக் கூர்ந்து கவனிச்சு படி. ஒரு கமா மாறினாலே, தமிழ்ல அர்த்தம் மாறிடும் அபாயம் இருக்கு’னு எனக்குக் கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாதிரி சொன்னாங்க. அதனால், தமிழை ரொம்ப விரும்பி படிக்க ஆரம்பிச்சேன். எல்லா கேள்வி, பதில்களையும் நேரங்காலம் பார்க்காம அடிக்கடி எழுதிப் பழகினேன். தமிழ்செல்வி அம்மா, அருமையா நடத்துனதால, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு இலக்கியங்கள் மீது பெரிய ஆர்வமே வந்தது. பப்ளிக் தேர்வுக்கு முன்னாடி பள்ளியில் நடந்த மாடல் தேர்வுல, தமிழ்ப் பாடத்தை நல்லா எழுதினேன்.
இறுதி தேர்விலும் மாடல் தேர்வுல கேட்கப்பட்ட கேள்விகளே பெரும்பான்மையா வந்ததால, என்னால் நல்லா எழுத முடிஞ்சது. தேர்வு எழுதி முடிஞ்சதும், எங்க அம்மாகிட்ட, ‘100 மார்க் வர்ற அளவுக்கு நல்லா எழுதியிருக்கேன். ஆனால், ஏதாச்சும் குறை கண்டுப்பிடிச்சாகூட 99 மார்க் வர வாய்ப்பிருக்கும்மா’ன்னு சொன்னேன். ஆனா, என்னோட அம்மா, ‘நீ அயராது எழுதி, படிச்சதுக்குக் கண்டிப்பா உனக்கு தமிழ்ல 100 மார்க் கிடைக்கும்’ன்னு உறுதியா சொன்னாங்க. அவங்க சொன்னதுபோலவே தமிழ்ல 100 மார்க் கிடைச்சது.
இதைத்தவிர ஆங்கிலத்தில் 96, கணக்கில் 92, இயற்பியலில் 97, வேதியியலில் 98, உயிரியலில் 100னு 583 மார்க் வாங்கியிருக்கேன். இந்த வெற்றிக்கு என்னோட பள்ளி முதல்வர் பிரின்ஸி மெர்லின், மத்த ஆசிரியர்கள் எல்லோரும் ஒரு காரணம். கால்நடைத்துறை மருத்துவரா ஆகணும்னு ஆசை. கட்ஆப் மார்க் 197.5 இருப்பதால், தமிழ்நாட்டுல உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள்ல எனக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கு. என்ன படிச்சு, என்ன உயரத்துக்குப் போனாலும், என்னைச் சாதிக்க வைத்து, எனக்குப் பெருமை தேடித் தந்த தமிழ்மொழியை மறக்கமாட்டேன்.
தமிழை இன்னும் ஆழமா கற்கும் ஆசையும், தமிழ் இலக்கியங்கள் மீதான விருப்பத்தையும் இந்த சாதனை எனக்கு ஏற்படுத்தியிருக்கு” என்றவர், “இதற்காக நான் தூக்கத்தைத் துறந்து விடியவிடிய கண்முழிச்செல்லாம் படிக்கவில்லை. தூக்கம் வந்தா நல்லா தூங்கிருவேன். விடியக்காலையில் பெரும்பாலும் படிப்பேன். விரும்பி படிச்சதால், இப்படிச் சாதிக்க முடிந்தது. என்னோட இந்தச் சாதனைக்காக முதல்வரை நேராகப் பார்த்து வாழ்த்து பெறணும்னு நினைக்கிறேன். அதற்கு வாய்ப்பு கிடைச்சா, நல்லா இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய, ஸ்ரீராமின் தாய் மணிமாலா, “இவன் தமிழை மட்டும் ஏன் இப்படி இவ்வளவு ஆர்வமா எந்நேரமும் எழுதிப்பார்க்கிறான்னு பலதடவை யோசிச்சிருக்கேன். ஆனா, அதோட காரணம் இப்போதான் புரியுது. எங்களுக்கு இவன் ஒரு புள்ளைதான். எனக்கு கொரோனா வந்தப்ப, இவன்தான் டீ போட்டுக்கொடுக்கிறது, சாப்பாடு ரெடி பண்ணி கொடுக்கிறதுன்னு எனக்கு ஒத்தாசையா இருந்தான். இப்பவும், தினமும் இரவு பாதாம் பருப்பை ஊற வைத்து, விடிந்ததும் எனக்கு சாப்பிடக் கொடுப்பான்.
‘இப்படி, ஒரு தங்கமான புள்ளையா? என்னோட தாயேதான் இப்படி ஒரு புள்ளையா வந்து பொறந்திருக்கா’ன்னு மனசுக்குள் நெகிழ்ந்துபோனேன். ஆனா, இப்படித் தமிழ்ல 100 மார்க் வாங்கி, எங்களுக்கு இன்னும் பெருமை சேர்த்துட்டான். ‘மணிமாலா பையன்ங்கிறது போயி, ஸ்ரீராமோட அம்மா மணிமாலா’ன்னு மத்தவங்க சொல்ற அளவுக்கு எங்களுக்குப் பெரும் பேரை சம்பாதிச்சு கொடுத்துட்டான். இப்படி ஒரு பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சுருக்கணும்” என்றார் நெகிழ்ச்சியுடன்.