பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழுவிற்கு இலங்கையின் வேட்பாளரான பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவு

2022 ஜூன் 23ஆந் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சாசனத்தின் அரச தரப்புக்களின் இருபத்தி இரண்டாவது கூட்டத்தின் போது இடம்பெற்ற தேர்தலில், பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐ.நா. குழுவிற்கு 2023-2026 காலப்பகுதியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில், சாசனத்திற்கான அரச தரப்புக்களால் பரிந்துரைக்கப்பட்ட 23 வேட்பாளர்களில் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 124 வாக்குகளைப் பெற்ற இலங்கை 5ஆவது அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. கியூபா, உகாண்டா, நைஜீரியா, எகிப்து, இஸ்ரேல், ஸ்பெயின், எஸ்டோனியா, அஜர்பைஜான், பல்கேரியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் ஜப்பான் ஆகியன தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நாடுகளாகும்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சாசனத்தில் இலங்கை 1981 இல் ஒரு அரச தரப்பாக இணைந்தது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவதற்கான குழுவானது, உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகள் குறித்த 23 நிபுணர்களைக் கொண்ட சாசனத்தை செயற்படுத்துவதைக் கண்காணிக்கும் சுயாதீன நிபுணர்களின் அமைப்பாகும்.

பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தற்போது ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக சட்ட பாடசாலையில் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப் பீடாதிபதியாகவும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய நிறுவனத்தின் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப் பட்டமும், சட்ட முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை ஹார்வர்ட் சட்ட பாடசாலையிலும் பெற்றார். உலக அளவில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பெண்களுக்கான சமமான பிரதிநிதித்துவத்திற்காக வாதிடும் அவர், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான குழுவின்  நிபுணர் ஆவார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 24

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.