நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 5 ரூபாய் 20 காசுகளில் இருந்து 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22-ம் தேதி 10 காசுகள் விலை உயர்த்தி 5 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இவ்விலை கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத உச்ச விலையாகும். நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முட்டை ஒன்றின் அதிக பட்ச விலை 5 ரூபாய் 25 காசுகளாக இருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறும் போது தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்த நிலையில் தேவை ஏற்பட்டதோடு, கோடையை ஒட்டி அதிகளவு வயதான கோழிகள் விற்பனை செய்யப்பட்டதால் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்தது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப் படுவதால் விற்பனைக்கு முட்டைகள் இல்லாததால் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவித்தனர். இவ்விலை தொடர்ந்து சற்று உயர வாய்ப்புள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM