சென்னை: அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
முதல்கட்ட சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நாளை தொடங்க உள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
அதன்படி, ஜூன் 26-ம்தேதி (நாளை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.
பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன்.
பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.