37 ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேரை பலிவாங்கிய ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் கனடாவின் வான்கூவரில் நினைவுகூரப்பட்ட நிலையில், பலியான தங்கள் உறவினர்களை நினைத்துக் கண்ணீர் வடித்தார்கள் அந்நகர மக்கள்.
1985ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் திகதி, கனடாவிலிருந்து லண்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று அட்லாண்டிக் சமுத்திரத்தின்மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறி மாயமானது.
இந்த கோர விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 329 பேருமே கொல்லப்பட்டார்கள். அவர்களில் 280 பேர் இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்த கனேடியர்கள். அவர்களில் 86 பேர் சிறுபிள்ளைகள்!
1984ஆம் ஆண்டு, சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததை எதிர்த்து, சீக்கிய தீவிரவாதிகள் இந்த விமானத்தில் குண்டு வைத்ததாக கனேடிய சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.
அந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் Talwinder Singh Parmar என்ற நபர், இந்தியாவில் பொலிசாரால் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
கனடா வரலாற்றிலேயே மிகவும் மோசமான அந்த விமான விபத்தில் பலியானவர்களின் நினைவாக, அந்த சம்பவத்தின் 37ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, வான்கூவரிலுள்ள Stanley Parkஇல், வியாழனன்று நடைபெற்றது.
அந்த விபத்தில் பலியான தங்கள் அன்பிற்குரியவர்களை நினைவுகூர்வதற்காக ஏராளமான பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மக்கள் அங்கு கூடினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், அந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட Eddie Madon என்பவரின் மகனும் ஒருவர்.
அந்த நாளின் பயங்கர நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன என்று கூறும் Eddie Madon, காலப்போக்கில் காயங்கள் ஆறியது உண்மைதான், ஆனாலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, உடனே அந்த வலி மீண்டும் வருவதை தவிர்க்கமுடியவில்லை என்கிறார்.