அசாமில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை யோகா முகாமில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பாஜக.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு தனி விமானத்தில் சென்றனர். இவர்களுக்காக குவாஹாட்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில், “அசாமின் குவாஹாட்டியில் ஒரு நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளவர்கள் அந்த ஓட்டலை யோகா முகாமாக மாற்றியுள்ளனர். அங்கிருப்பவர்கள் எல்லோரும் புத்தி மயங்கிக் கிடக்கின்றனர்” என்று குறிப்பிடப்படுள்ளது.
முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவராக உள்ள ஏக்நாத் ஷிண்டே, “பாஜக பாகிஸ்தானுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளது. அதனை நாங்கள் இந்த யோகா முகாமில் தெரிந்து கொண்டேன்” என்று கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள சிவசேனா, “அசாமில் ஏதோ யோகா முகாம் நடப்பதாக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கே பாகிஸ்தானுக்கு பாஜக பாடம் கற்பித்ததாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பாகிஸ்தானுக்கு என்ன பாடம் கற்றுக் கொடுத்தனர் என்பது புரியவில்லை. இன்னமும் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறையவில்லை. காஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுகின்றனர். பாஜக ஆட்சியில் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேறும் சூழல் உள்ளது. ஆனால் இவர்கள் தங்களை இந்துத்துவா அரசு எனக் கூறிக் கொள்கின்றனர். இதுதான் உங்களின் சூப்பர்பவரா?
யோகா முகாமில் எல்லோரும் போதையில் உள்ளனர். அதனால் தான் இப்படிப் பேசுகின்றனர். பாஜக எங்கே மத்திய அமைப்புகள் மூலம் நடவடிக்கையை ஏவிவிடுமோ என்ற அச்சத்தில் தான் சிலர் இவ்வாறாக எக்நாத் ஷிண்டேவுடன் இணைந்துள்ளனர். வாடைக்கு ஆள்பிடித்த பெருமை பேசுகிறது” பாஜக என்று கூறியுள்ளது.
அதேபோல், “மகாராஷ்டிரா அரசை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜக ஆளும் அசாமில் வெள்ளத்தால் மக்கள் தவிக்கின்றனர். ஆனால் அம்மாநில முதல்வரோ ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் யோகா முகாமில் இருக்கின்றனர்” என்றும் அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.