இந்திய நிகழ்வுகள்
மாணவன் மீது தாக்குதல்: ‘டியூஷன்’ ஆசிரியர் கைது
கொச்சி-கேரளாவில், 4 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய, ‘டியூஷன்’ ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கேரளாவின் கொச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த டியூஷன் ஆசிரியர் தன்னிடம் படித்த, 4 வயது சிறுவனை, சரியாக படிக்கவில்லை எனக் கூறி, சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த சிறுவன், பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், நேற்று அந்த ஆசிரியரை கைது செய்தனர். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேசிய கொடி அவமதிப்பு; எம்.எல்.ஏ., மீது வழக்கு
லக்னோ-தேசியக் கொடியை அவமதித்ததாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரீய லோக் தளம் எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அனில் குமார், கடந்தாண்டு சுதத்திர தினத்தின் போது நடந்த ஒரு நிகழ்வில் தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவர் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான ‘வீடியோ’வும் வெளியானது. இந்நிலையில் தியாகி என்பவர் முஜாபர்நகர் நீதிமன்றத்தில் குமாருக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ., குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய, நேற்று உத்தரவிட்டது. இது குறித்து குமார் கூறுகையில், ”நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விட்டேன். உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
சிறுமி பலாத்கார கொலை வழக்குகுற்றவாளிக்கு துாக்கு உறுதி
புதுடில்லி-மனநலம் பாதிக்கப்பட்ட ஏழரை வயது மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு, உச்ச நீதிமன்றம் துாக்கு தண்டனையை நேற்று உறுதி செய்தது.
மேல்முறையீடு
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழரை வயது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி சிறுமி, 2013 ஜனவரியில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின் கொடூரமாக கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை 2015, மே மாதம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் துாக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனசாட்சி
இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்தக் குற்றம் மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. குற்றவாளி, மனநலம் பாதிக்கப்பட்ட ஏழரை வயது மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது தலையை நசுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். எனவே, குற்றவாளிக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக நிகழ்வுகள்
பட்டாசு வெடி விபத்துபலி 4 ஆக உயர்வு
கடலுார்:கடலுார் அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில், சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று இறந்தார். அதையடுத்து, பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
கடலுார் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்; எம்.புதுார் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.பட்டாசு குடோனில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து, நாட்டு வெடிகள் மற்றும் வாணவெடிகள் வெடித்து சிதறியதில், குடோன் தரைமட்டமானது; இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் இறந்தனர்.
படுகாயமடைந்த நெல்லிக்குப்பம் குடிதாங்கிச்சாவடியை சேர்ந்த சேகர் மனைவி வசந்தா, 45, மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
சைக்கிள் ஸ்டாண்டில் ‘வழிப்பறி’ வசூல் வேட்டை
திருமங்கலம்,-நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் நிர்ணயித்ததை விட கூடுதலாக ‘வழிப்பறி’ போல கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் செயல்படும் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 5க்கு பதில் ரூ. 12 வசூலிக்கப்படுகிறது. மேலும் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்படாமல் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதுவதால் சேதமடைகின்றன. உரிய அனுமதி பெறாமல் செயல்படும் தனியார் வாகன காப்பகங்களிலும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.நகராட்சி கமிஷனர் டெரன்ஸ் லியோனிடம் கேட்டபோது, ”கூடுதல் கட்டணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
வீட்டிற்குள் பாய்ந்த பஸ்; மூதாட்டி உட்பட பலர் காயம்
அம்பத்துார்:தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார், கடை, வீட்டின் மீது மோதிய சம்பவத்தில், மூதாட்டி உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
சென்னை அம்பத்துார் அடுத்த அத்திப்பட்டு, அயப்பாக்கம் சாலையில், நேற்று காலை 8:30 மணியளவில் சென்ற தனியார் நிறுவன பேருந்தில், 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயணித்தனர்.அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற காரின் மீது மோதியும் நிற்காமல், வலப்பக்கமாக திரும்பி, அங்கிருந்த கடை மற்றும் வீட்டின் மீது மோதி நின்றது.
இதில், அங்கிருந்த டீ மற்றும் குளிர்பான கடை, அதையொட்டி இருந்த வீடு ஆகியவை இடிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி, 62; என்ற மூதாட்டி, கட்டட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார்.அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் பேருந்து ஓட்டுனர், டீ கடையில் இருந்தவர்கள், பேருந்தில் பயணித்த பெண்கள் என, 20 பேர் வரை காயமடைந்தனர்.தகவல் அறிந்த அம்பத்துார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, அம்பத்துார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
நூறு வயது புளிய மரத்தை எரித்த சமூக விரோதிகள்
மதுரை -மதுரை சமயநல்லுார் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சமூகவிரோதிகள் வைத்த தீயால் நுாறாண்டு பழமையான புளியமரம் பற்றி எரிந்தது.காலை 8:00 மணிக்கு கால்நடை டாக்டர்கள், பணியாளர்கள் பணிக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். 9:00 மணிக்கு புளியமரத்தின் மேற்பகுதி பொந்திலிருந்து புகை அதிகமாக வந்ததால் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மீண்டும் தீ மற்றும் புகை வரவே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சோழவந்தான் தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மரத்திலுள்ள பொந்துகளின் வழியாக வேர் வரை தீ பரவியதால் மரம் வலுவிழந்தது. மீண்டும் தீப்பற்றாமல் இருக்க களிமண் பூச்சால் பொந்துகளை அடைத்தனர். மரத்தை வெட்டி அகற்றும் பணி துவங்கியது.கால்நடை உதவி இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் கூறுகையில், மரத்திற்கு தீ வைத்தது யாரென தெரியவில்லை. மரம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. மரம் விழுந்து விபரீதம் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர் அனுமதி பெற்று மரத்தை அகற்றுகிறோம்” என்றார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த தொழிலாளி ஆண்டிச்சாமி 24, க்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆண்டிச்சாமி 2018 ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ‘போக்சோ’ சட்டத்தில் கைதான இவர் மீதான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமார், குற்றவாளி ஆண்டிச்சாமிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை, ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தார்.
லாரி மொபெட் மோதல்; தம்பதி பரிதாப பலி
விழுப்புரம்:விழுப்புரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மொபட் மோதியதில், கணவன், மனைவி இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார், பையூர்மேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 62; மனைவி அம்சவள்ளி, 54; செங்கல் சூளைத் தொழிலாளர்கள்.வழுதாவூர் பக்கிரிப்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலையை முடித்து விட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு மொபட்டில் வீடு திரும்பினர்.
அதிகாலை, 1:00 மணிக்கு செஞ்சி பைபாஸ் சாலை, முத்தாம்பாளையம் மேம்பாலம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மொபட் மோதியது.இதில், ராதாகிருஷ்ணன் இறந்தார். படுகாயமடைந்த அம்சவள்ளி மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ 10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்
மதுரை:மதுரையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்திருந்த நகை பட்டறை உரிமையாளர்உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, தெற்கு மாசிவீதி மறவர் சாவடி வார்வு கண்ணார் தெருவில், மஞ்சணக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் நகைப்பட்டறை உள்ளது.இங்கு, வாசனை திரவியம், மருத்துவம் உட்பட பல்வேறு பயன்பாட்டிற்கான, தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான, ‘அம்பர் கிரீஸ்’ பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சோதனையிட்டு, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 கிலோ அம்பர் கிரீசை பறிமுதல் செய்தனர்.ராஜாராம், கூட்டாளிகளான மற்றொரு நகை பட்டறை உரிமையாளர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சுந்தரபாண்டி, 36, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீரனுார் கவி, 48, ஆகியோரை கைது செய்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
நேருக்கு நேர் கார் மோதல் தாய், மகன் பரிதாப பலி
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தாய், மகன் பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த வங்காரம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 47. இன்ஜினியராக வேலை பார்த்த இவரது தாய் வசந்தா, 65.தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், செந்தில்குமாரும், அவரது தங்கை ராணியும், நேற்று ‘மாருதி சுசுகி வேகனார்’ காரில், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதே போல், திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த கிருபாகரன், 34, அவரது மனைவி வரலட்சுமி, 26, அவர்களது 8 மாத பெண் குழந்தை ஸ்மிருதி, கிருபாகரனின் தாய் யசோதா, 63, ஆகியோர் திருக்காருக்காவூர் கோவிலுக்கு, ‘மாருதி சுசுகி ஸ்விப்ட்’ காரில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் அருகே நாகை சாலையில், புலவர்நத்தம் என்ற இடத்தில் சென்ற போது, இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், செந்தில்குமார், அவரது தாய் வசந்தா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.காரில் இருந்த ராணியும் மற்றவர்களும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.