சிவசேனா உடைந்த கதை: திரைமறைவில் செயலாற்றிய 3 பாஜக தலைவர்கள்: தாக்கரே குடும்பத்தினருக்கு தெரியாமல் ஷிண்டே எம்எல்ஏக்களை அழைத்துச் சென்ற பின்னணி

மும்பை: தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவசேனா கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் 40 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றநிலையில் இதன் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிவசேனாவை உடைத்ததன் பின்னணியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேரந்த 3 பாஜக இரண்டாம் கட்டத் தலைவர்கள் ரகசியமாக பணியாற்றியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு தனி விமானத்தில் சென்றனர். இவர்களுக்காக குவாஹாட்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

கட்டுப்பாடான கட்சி

சிவசேனா என்பது கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே காலத்தில் இருந்த அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. கட்டுப்பாடான கட்சியான சிவசேனாவில் தலைவர் உத்தவ் தாக்கரேயின் நிழலை தாண்டி யாரும் எதுவும் செய்து விட முடியாது. கட்சியின் 2-ம் கட்டத் தலைவர்கள் கூட அவரிடம் பேசுவதற்கே அஞ்சும் நிலைதான் உள்ளது.

அப்படிபட்ட சூழலில் கட்டுப்பாடுகளை தாண்டி சிவசேனா உடைந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. மாநில அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே எப்படி 40 எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு கட்சித் தலைமைக்கு சவால் விடும் நிலைக்கு சென்றார் என்ற ஆச்சரியம் பலருக்கும் உள்ளது.

பால் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தாங்கள் காரணமல்ல என்றும் அதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக கூறி வருகிறது. ஆனால் மகாராஷ்டிர மாநில பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூன்று பேர் திரைக்குப் பின்னால் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

3 பாஜக தலைவர்கள்

சிவசேனா அதிருப்தியாளர்களை மும்பையில் இருந்து சூரத்துக்கும் பின்னர் குவஹாட்டிக்கும் அழைத்துச் செல்ல வாகனங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்தது பாஜகவின் எம்எல்ஏக்களான ரவீந்திர சவான், டாக்டர் சஞ்சய் குடே மற்றும் பாஜக இளைஞர் அணித் தலைவர் மோஹித் காம்போஜ் ஆகியோர் கடினமாக செயல்பட்டு கனகச்சிதமாக இந்த பணியை முடித்துள்ளனர்.

இதில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாஜக அரசில் சவான் மற்றும் குடே ஆகியோர் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். தற்போது அவர்களும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குவஹாட்டியில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை எல்லாம் முக்கூட்டியே திட்டமிடப்பட்டு சரியான நேரத்தில் செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் ஆகியோர் இதற்கான முயற்சியை பின்னணியில் இருந்து எடுத்துள்ளனர். எனினும் அவர்கள் கூட நேரடியாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கவில்லை.

ரகசிய ஏற்பாடு; அறியாத உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு டெல்லியில் உள்ள பாஜக உயர்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசிதயாகவும், பின்னர் பாஜக தலைமை இதனை செய்து முடிக்க மாநில தலைமைக்கு அதிகாரத்தை வழங்க ஒத்துழைப்பு வழங்க கூறியதாக தெரிய வருகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பை நகரத்திலிருந்து வெளியேற்றி சூரத் அழைத்து செல்லும் பணி முழுவதுமே மிக விரைவாகவும் அதேசமயம் ரகசியமாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநில காவல்துறையின் புலனாய்வுப் பிரிவினரால் கூட அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அந்த அளவிற்கு கண கட்சிதமாக பணிகள் நடந்தேறியுள்ளன.

மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்

இதுபோன்ற செயல்பாட்டுக்கு மிகவும் ரகசியம், பணம், போக்குவரத்து முதல் தங்குமிடம் வரையிலான ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. இதற்கு குறுகிய காலத்தில் நிறைய திட்டமிடல் மற்றும் பல்வேறு நபர்களை தொடர்பு கொள்ள வேண்டியது இருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமின்றி குஜராத் பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு சூரத்திலும், பின்னர் அசாம் பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு குவஹாட்டியிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலையில் இந்த பணிகள் அனைத்துமே சரியான முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல் அசாம் வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி பாஜக தலைமையால் பணிக்கப்பட்டுள்ளனர்.

சிந்துதுர்க்கைச் சேர்ந்த சவான், குங்குமப்பூவின் விற்பனைக்கு பெயர் போன மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவலியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மராட்டியரான இவர், 2005ல் கல்யாண் டோம்பிவலி மாகராட்சி தேர்தலில் முதல் கவுன்சிலராக தனது தேர்தல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவராக இருந்தார்.

2009-ல் முதன்முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஆரம்பத்தில் மூத்த தலைவர் வினோத் தவாடேவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் பின்னர் தனது அப்போதைய முதல்வர் பட்னாவிஸிக்கு நெருக்கமானார். சவான் 2016 இல் மாநில அமைச்சரானார். அத்துடன் மீரா பயந்தர், தானே மற்றும் நவி மும்பை உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியின் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து காட்டினார்.

மற்ற மாநில பாஜக ஒத்துழைப்பு

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறுகையில் ‘‘இந்த பணிக்கு சவானின் தேர்வு சரியான நடவடிக்கை. சிவசேனா பற்றிய அவரது நுணுக்கமான அறிவு மற்றும் அதன் வலிமையான தந்திரங்கள் போன்றவற்றை தெரிந்தவர். இதுமட்டுமின்றி அந்த கட்சியின் மூத்த தலைவர்களுடனம் எப்போதும் தொடர்பில் இருப்பவர். சேனாவின் வலுவான செயல்பாடுகளையும், அதன் தற்போதைய நகர்வுகளையும், பலவீனங்களையும் அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட சரியான நபர் என்பதால் அவரை பாஜக மாநில தலைவர் தேர்வு செய்து பொறுப்பை கொடுத்தது.

அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஷிண்டே

சவானுக்கு ஷிண்டேவுடன் நல்ல உறவு இருக்கிறது. தானேவில் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் இருவரும் எப்போதும் கைகோர்த்து செல்வதும் வழக்கம். இந்த உறவு அவர் ஷிண்டேவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை எளிதாக்கியுள்ளது.அவர்கள் சமமான அடிப்படையில் நண்பர்கள் ஆவர்.

ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் கல்யாண் தொகுதியில் சிவசேனா எம்.பி.யாக உள்ளார். இந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதியில் தான் சவானின் தொகுதியான டோம்பிவலி இடம் பெற்றுள்ளது.

‘ஆபரேஷன் சிவசேனா’

‘ஆபரேஷன் சிவசேனா’வில் பணியாற்றிய மற்றொரு பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் குடே
ஆயுர்வேத மருத்துவப் பயிற்சியாளர். இதுமட்டுமின்றி பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவராகவும் குடே இருந்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு முதல் புல்தானாவின் ஜல்கான்-ஜமோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அங்கிருந்து தொடர்ந்து வென்ற வருகிறார்.

மூன்றாவது நபர் வாரணாசியைச் சேர்ந்த காம்போஜ், இந்திய பொன் மற்றும் நகை சங்கத்தின் தலைவராக இருந்தார். மேலும் நகை வணிகத்தைத் தவிர, ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளிலும் பங்குகளை வைத்துள்ளார். கடந்த ஆண்டு, கம்போஜ் தனது குடும்பப் பெயரை ‘பாரதியா’ என்று மாற்றிக் கொண்டார்.

தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பியூஷ் கோயல்: கோப்புப் படம்

இந்த விவகாரத்தில் பாஜக தலைமை மிகவும் ரகசியமாக செயல்பட்டுள்ளது. இந்த மூன்று பேர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அதற்காக தெரியாதது போல இருந்து கொண்டது. பாஜகவின் சில மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், இந்த நடவடிக்கையில் மூன்று தலைவர்களின் தலையீடு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவில் நிகழும் எந்த ஒரு விஷயத்திலும் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருந்தார். ஆனால் ரகசியமாக இந்த மூன்று இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரியான முறையில் செயலாற்றி தங்கள் இலக்கை எட்டி சிவசேனாவை உடைத்து விட்டர்.

இதுமட்டுமல்லாமல் அடுத்தாக மகாராஷ்டிராவில் என்ன அரசியல் நடவடிக்கையை பாஜக செய்யப்போகிறது என்பதும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.