மதுரை: ஹிஜாப் தீர்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய 7 பேர், ‘இனி மேல் இவ்வாறு பேச மாட்டோம்’ என உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரஹமத்துல்லா என்பவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக மதுரை அசன்பாட்ஷா, அபிபுல்லா உள்ளிட்ட பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அசன்பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் கோரிப் பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனி உமர் கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, எதிர்காலத்தில் இதுபோன்று பேச மாட்டோம் என மனுதாரர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், இனிமேல் இவ்வாறு பேசமாட்டோம் என தனித்தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து விசாரணையை ஜூன் 29-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.