கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தேக்கடி ஷட்டர் வழியே நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் ஒரு கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை வழியே போர்பே அணைக்கு வந்து சேருகிறது. பின்பு அங்கிருந்து நான்கு ராட்சத குழாய்கள் மற்றும் இரைச்சல் பாலம் வழியாக தமிழகப் பகுதிக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் தமிழக நீர்ப் பாசனத் துறை தலைமைப் பொறியாளராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஞானசேகர் ஒரு வாரமாக அணைப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச் செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின் உள்ளிட்ட குழுவினர் இரைச்சல் பாலப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர்.
இதில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க வாய்ப்புள் ளதா? என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் பரா மரிப்பின்போது குழாய்களில் நீர் கொண்டு செல்வதற்குப் பதிலாக இரைச்சல் பாலம் வழியே தண்ணீர் வெளியேற்றப்படும். பெரியாறு அணையில் கூடுதல் நீர் இருந்தாலும் தமிழகத்துக்கு அதிகபட்சம் விநாடிக்கு 2,600 கன அடி நீர்தான் வருகிறது. நீரின் அளவை அதிகரிக்க ஆய்வு நடைபெறுகிறது என்றனர்.