கன்னட சினிமா நடிகர் சிவராஜ் குமார் 1986 முதல் நாயகனாக நடித்துவருகிறார். அப்பா ராஜ்குமாரைப் போலவே கன்னடத் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது சகோதரரும், சக்சஸ்ஃபுல் ஆக்ஷன் ஹீரோவாகவும் வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடைப்பு காரணமாக மறைந்தார்.
இவரது மறைவுக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்தனர். நடிகர் விஜய் இவரது சமாதிக்குச் சென்று தன்னுடைய அஞ்சலியைச் செலுத்தினார். நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி, சூர்யா உள்ளிட்டோரும் இவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ கடந்த மார்ச் மாதம் திரையில் ரிலீஸானது. அதில் சிவராஜ் குமாரும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸான நிலையில், ரிலீஸுக்கு முன்பு சிவராஜ் குமார் குடும்பத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தற்போது சிவராஜ் குமார், இயக்குநர் நெல்சன் ரஜினியை வைத்து எடுக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து சிவராஜ் குமாரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தாலும், படக்குழுவிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ரஜினியுடன் நடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என சிவராஜ் குமார் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிவராஜ் குமாரின் 125-வது படமான ‘வேதா’ கன்னடத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூரின் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படம் 1960-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி வருகிறது. போனி கபூருடன் இணைந்து சிவராஜ் குமாரும் தன் கீதா பிக்சர்ஸின் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். சிவராஜ் குமாரை வைத்து ஏற்கெனவே 3 படங்கள் எடுத்த ஹர்ஷா இந்தப் படத்தையும் இயக்குகிறார். அர்ஜுன் ஜன்யா படத்துக்கு இசையமைக்கிறார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது.