அடுத்தடுத்த திடீர் பரபரப்புத் திருப்பங்களைச் சந்தித்து வந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுதல் புலன்விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. சாட்சி விசாரணைகள் முடிந்து கிட்டத்தட்ட தீர்ப்பை எட்டும் நிலையில் இருந்த இந்த வழக்கை கையில் எடுத்த தற்போதைய அரசு, கூடுதல் விசாரணையை ஆரம்பித்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட 10 நபர்களில் சயான், வாளையார் மனோஜ், சதீசன், உதயகுமார், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜித்தின் ராய், பிஜின் ஆகிய 9 பேர் ஆஜராகினர். கூடுதல் விசாரணையை தொடர மேலும் கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீதர், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை குறித்து தெரிவித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர், “இந்த வழக்கில் தற்போது வரை 257 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர் . கேரளாவுக்குச் சென்று சயானின் வாகன விபத்து குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது.
கொலை, கொள்ளை சம்பவம் நடந்த சமயத்தில் கர்நாடக மாநிலத்துக்கு தகவல் பரிமாற்றம் நடைபெற்று இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்க அந்த மாநில காவல்துறையின் உதவியை கேட்க தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணை தொடரும்” என்றனர்.