சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கி உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அனுப்பி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். இதை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உள்ள எதிரக்கட்சி பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மாநிலத்தில், ஆட்சியை அமைக்கும் வேலைகளில் ஈடுபடும்.
இந்நிலையில் இன்று, மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி உள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து, ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வரும் 27 ஆம் தேதி மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்காத பட்சத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.