5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்… சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதி முயற்சியாக சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயைக் கொண்டு பாஜக தனது அடுத்தகட்ட முயற்சியை எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சித் தொண்டர்கள், தலைவர்களைச் சந்திக்காமல் இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாஜக காய்நகர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் வழியாக அஸ்ஸாமுக்கு அழைத்துச் சென்று கவுஹாத்தியில் இருக்கும் ஃபைவ் ஸ்டார்ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்குப் படையெடுத்துக்கொண்டே இருந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூட சிவசேனாவால் முடியவில்லை. அஸ்ஸாமில் பாஜக முதல்வர் இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறாராம்.

பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாமல் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்களாம். பாஜக மூத்த தலைவர்கள்கூட நேரில் வந்து பார்க்காமல் இருக்கின்றனர். கவுஹாத்தி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ரேடிஸ்ஸன் புளூ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்காக 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதோடு புதிய புக்கிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தால் அவர்கள் மட்டும் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஹோட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்துக்கு ஹோட்டல் வாடகை மட்டும் 56 லட்ச ரூபாய் என்கிறார்கள். இது தவிர ஹோட்டல் சாப்பாடு போன்ற மற்றவற்றுக்கு தினமும் 8 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருக்க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் ரூ.1.12 கோடி செலவிடப்பட்டுவருகிறது. ஹோட்டலில் இருக்கும் ரெஸ்டாரன்ட் வெளியிலிருந்து வருபவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் மட்டும் உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சூரத்திலிருந்து எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்குச் செல்ல தனி விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. 30 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் ஒரு முறை பயணம் செய்ய ரூ.50 லட்சம் வாடகையாம். இது தவிர மும்பையிலிருந்து அடிக்கடி எம்.எல்.ஏ-க்கள் குஜராத்துக்கு வந்ததால் அவர்களையும் தனியாக சிறிய விமானத்தில் அனுப்பிவைத்தனர். இந்த விமானத்தில் ஒரு முறை பயண வாடகை ரூ.35 லட்சம். இரண்டு சிறிய விமானங்கள் எந்நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

உத்தவ் தாக்கரே

இதற்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் பாஜக மறைமுகமாகச் செய்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டே அளித்திருந்த பேட்டியில், தேசியக் கட்சி தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மும்பைக்குத் திரும்பும் பட்சத்தில் வன்முறை ஏற்படும் என்று கருதப்படுகிறது. எனவே மும்பை மற்றும் தானேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.