KN Nehru initiates providing fertilizer packs to farmers for crop production in Trichy: தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமது சொந்த மண்ணான லால்குடி பகுதியில் இன்று தொடங்கி வைத்தார்.
லால்குடி எல்.அபிஷேகபுரத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் இன்று (25.06.2022) நடைபெற்ற விழாவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, நூறு சதவீதம் உர மானியத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்பினையும் வழங்கினார்.
இதையும் படியுங்கள்: ‘ஓவரா ஆடாதீங்க; ஓட்ட நறுக்கி விடுவோம்’: திருச்சியில் போலீசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பா.ஜ.க
திருச்சி மாவட்டத்தில், குறுவை சாகுபடித் தொகுப்பானது, லால்குடி ஒன்றியத்தில் 5200 ஏக்கர், திருவெறும்பூர் ஒன்றியத்தில் 250 ஏக்கர், அந்தநல்லூர் ஒன்றியத்தில் 150 ஏக்கர், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 100 ஏக்கர் என மொத்தம் 5700 ஏக்கர் அளவில் செய்யப்படுகிறது. இந்த 5700 ஏக்கருக்கும், ஏக்கர் ஒன்றிற்கு ரூ.2466.50 மதிப்பில் நூறு சதவிகித மானியத்தில் 45 கிலோ யூரியா உரம், 50 கிலோ டி.ஏ.பி, உரம் 25 கிலோ எம்.ஓ.பி உரம் ஆகியன கொண்ட குறுவை சாகுபடித் தொகுப்பு ரூ.140.59 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்பில் கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மேலும் அன்பில் மங்கம்மாள்புரம் மற்றும் ஆங்கரை கோவிந்தராஜபுரம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய நியாய விலைக் கடையினையும் அமைச்சர் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.ஜெயராமன், ஒன்றியக் குழுத்தலைவர் தி.ரவிச்சந்திரன், மாவட்டப் பிரமுகர் க.வைரமணி மற்றும் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்