வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அதே வேளையில் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பலவும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. வெறும் ஆதரவு என்ற வார்த்தைகளைத் தாண்டி சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று, பெண்கள் கருக்கலைப்பு செய்ய அண்டை நாடுகளுக்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு, பயணப்படி என எல்லாம் தருவதாக அறிவித்துள்ளன.
வழக்கு பின்னணி: கடந்த 1973 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று 1973-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து. ஆனால், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 50 ஆண்டு காலத்திறகுப் பிறகு கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை இயற்றியுள்ளன. தன் சொந்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் மீறிவிட்டதாக எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. இதற்கிடையில், கிடைத்துள்ள ஆறுதல் செய்திதான் வரிசைக்கட்டி உதவிகளை வாரி வழங்கும் அமெரிக்க நிறுவனங்களின் அறிவிப்பு. அதன் விவரம்:
அமேசான்: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய வேலைவாய்ப்புக் களமான அமேசான், தனது பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு உள்பட உயிருக்கு ஆபத்து ஏற்படாத பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ள பயணப்படியாக 4,000 டாலர் வரை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் இன்க்: இந்நிறுவனமானது தனது பெண் ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கப்பீடு திட்டத்தின் கீழ் கருக்கலைப்பும் அதற்கான பயணச் செலவும் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்: மைக்ரோஃபாஃப்ட் நிறுவனமானது கருக்கலைப்பு மற்றும் பாலினம் சார்ந்த மருத்துவ சேவைகளுக்கான காப்பீட்டை விரிவுபடுத்தி இனி பயணச் செலவையும் சேர்த்து வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது.
மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் இங்க்: தங்கள் நிறுவனம் கருக்கலைப்பு செய்ய வெளிநாடு செல்லும் பெண் ஊழியர்களின் பயணச் செலவை திருப்பி அளிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனை எவ்வளவு சிறப்பாக செய்யலாம் என்பது குறித்து சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது.
வால்ட் டிஸ்னி: கருக்கலைப்புக்காக வெளிநாடு செல்லும் ஊழியர்களின் செலவை உள்ளடக்கிய இன்சூரன்ஸ் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ்: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் எப்படி தனது ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த நெருங்கிய உறவினர்கள் புற்றுநோய், உறுப்புமாற்று சிகிச்சைக்கு செல்லும்போது பயணச் செலவை ஏற்றுக்கொள்கிறதோ அதுபோலவே கருக்கலைப்பு செலவையும் ஏற்றுக் கொள்ளும்.
சிட்டிகுரூப் இங்க்: சிட்டிகுரூப் இங்க் நிறுவனமானதும் பயணச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது. ஜேபிமார்கன் சேஸ் அண்ட் கோ: ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ நிறுவனமானது அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் சட்டபூர்வமாக கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறதோ அந்த மாகாணத்துக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டு திரும்ப பயணச் செலவைத் திரும்பத் தரும் என்று கூறியுள்ளது.
ஸ்டார்பக்ஸ்: ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் தங்களின் பெண் ஊழியர்கள் சட்டபூர்வ கருக்கலைப்புக்காக 100 மைல் தாண்டிய இடத்துக்குச் செல்வது தேவையாக இருந்தால் அவர்களுக்கு பயணச் செலவை திரும்ப அளிக்கும். அவர்களுடன் செல்லும் நபருக்கான செலவையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோ: தங்கள் ஊழியர்களின் கருக்கலைப்பு செலவு பயணச் செலவு என எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
உபெர் டெக்னாலஜிஸ்: தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில், மகப்பேறு, கருக்கலைப்பு செலவுகள் ஏற்கும் வழிவகை உள்ளது என்று கூறியுள்ளது.
கோல்ட்மேன் சேக்ஸ் குரூப்: ஜூலை 1 ஆம் தேதி முதல் தனது நிறுவன ஊழியர்களின் கருக்கலைப்புக்கான பயணச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
வாசிக்க > அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு