வன்னியில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடந்த விளையாட்டு விழாவின் போது பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.
இலங்கை இராணுவ ஊடகங்களின்படி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 56ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தின் 562ஆவது படைப் பிரிவின் துருப்புக்கள், ஈச்சங்குளம் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு அண்மையில் (ஜூன் 17) நடைபெற்ற வருடாந்த விளையாட்டு விழாவின் போது அவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு சுவையான மதிய உணவை வழங்கி உபசரித்தனர்.
பிறதேச மக்களுடன் நல்லுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இரானுவத்தினர் இந்த சமூக சேவை நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டலுடனும் 56 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் ஆதரவுடனும் இந்த சமூக சேவை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.