அல்லு அர்ஜுனின் `புஷ்பா’ வெற்றிக்குப் பின் தெலுங்கு சினிமாவில் செம ஸ்கோர் செய்து வருகிறார் மைம் கோபி. அடுத்து `கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இந்தியில் பிரபாஸை வைத்து இயக்கிவரும் `சலார்’ தவிர தெலுங்கு, தமிழ் என அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் கோபியிடம் பேசினேன்.
நீங்க நடிக்கற படங்கள்ல அதன் இயக்குநர்கள் உங்களிடம் படத்தின் கதையைச் சொல்வாங்களா? இல்ல, உங்களோட கதாபாத்திரத்தை மட்டும் சொல்வாங்களா?
“கதை சொல்வாங்க. இங்கே முக்கியமான கதாபாத்திரம்ன்னு ஒருத்தரை மட்டும் சொல்லிட முடியாது. உதாரணமா, ஒரு கதாபாத்திரம் லெட்டர் ஒண்ணைக் கொடுக்கணும். அந்த லெட்டர்ல ஏதோ முக்கியமானது எழுதியிருக்கு. இன்னொரு கதாபாத்திரம் அதை படிக்குது. அதன்பிறகு கதையே நகருது. இதுல லெட்டர் கொண்டு வந்தவர் முக்கியமான பாத்திரம்னு வைச்சிப்போம். ஆனா, அந்த லெட்டரை எழுதினது யாரு? இப்படி அலசிட்டே போனா… எது முக்கியமான கதாபாத்திரம்ன்னு ஒரு கேள்வி எழும்! எல்லாமே முக்கியமானதா தெரியும். இதை உள்வாங்கி பண்றதுல இருக்கு வித்தை. சினிமா அழகான மேஜிக். அதை நேசிச்சா, அது நம்மள விடாது. நாம சினிமாவை எவ்வளவு எவ்வளவு நேசிக்கிறோமோ அது நம்மள கோபுரத்துல உட்கார வைக்கும். நாம அதுக்கு உண்மையா இருந்தா உயர்த்தும். இன்னிக்கு நான் உங்க முன்னாடி நிக்கறதுக்குக் காரணமே என்னை இயக்கின இயக்குநர்கள்தான்.”
டெரர் வில்லனாகக் கலக்கிட்டு இருக்கும் நீங்க, அசத்தலா பாடவும் செய்வீங்களாமே?
“முதல் தடவையா பாடியிருக்கேன். இளையராஜா சாரை ரொம்ப பிடிக்கும். என்னோட கல்லூரி நாள்கள்ல கல்ச்சுரல்ஸ்ல அவரது குரலை இமிடேட் பண்ணி பாடியிருக்கேன். அப்புறம் இப்ப உறவுகளின் மேன்மையையும் உன்னதத்தையும் தகப்பனின் அருமையை உணர்த்தும் விதமா ‘தகப்பன் தாலாட்டு’ன்னு ஒரு இசை ஆல்பம் ரெடியாகிட்டு வருது. அதுலதான் பாடியிருக்கேன். எனக்குப் பாட்டு பாட வருமான்னு தெரியல. இசையமைப்பாளர் கார்த்தி தம்பிதான் ‘உங்க குரல்ல ஒரு கரகரப்பு இருந்துட்டே இருக்கும்’ன்னு சொல்லி பாட வைச்சிருக்கார். சீக்கிரமே அந்தப் பாடலை ரிலீஸ் பண்ணப் போறோம்.”
பா.இரஞ்சித்துக்கு உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க…
“‘மெட்ராஸ்’ங்கற படம் வந்த பிறகுதான் என்னை வில்லனா அங்கீகரிச்சாங்க. எனக்கு நல்லதொரு வாய்ப்பு கொடுத்தது தம்பி பா.இரஞ்சித்தான். இன்னிக்கு நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்றதுக்குக் காரணம் தம்பிதான். நடிக்க வர்றதுக்கு முன், வீதி நாடகங்கள் நிறைய பண்ணுவேன். அப்படி ஒரு முறை ஓவியக்கல்லூரியில் ப்ளே ஒண்ணு பண்ண போனப்பத்தான் பா.இரஞ்சித் தம்பியைப் பார்த்தேன். ஒரு சாயந்திர நேரம். இருட்டுன பிறகு அந்த நாடகம் தொடங்கப் போகுது. விளக்கே இல்லாமல், தீப்பந்தங்களை வச்சு, அந்த வெளிச்சத்துல நாடகம் நடந்தது. ரொம்ப புதுமையா இருந்துச்சு. யார்றா இதுன்னு ஆச்சரியமா விசாரிச்சப்பதான் பா.இரஞ்சித் தம்பி அறிமுகமாகுறாங்க. அந்த நட்பு தொடர்ந்தது.
அவர் படம் பண்றப்ப என் மைம் ஸ்டூடியோவில் இருக்கற தம்பிகளை அவர்கிட்ட ‘இந்தத் தம்பிகள் நல்லா நடிப்பாங்க’ன்னு சொல்லி அறிமுகப்படுத்தினேன். அதில் நிறைய பேரை அவர் செலக்ட் பண்ணிக்கிட்டார். என்கிட்ட அவர் ‘இந்தப் படத்துல உங்களுக்கான பெரிய ரோல் இல்ல. அடுத்தப் படத்துல பண்ணலாம்’னார். அதே மாதிரி அவர் சொன்னது மாதிரி ‘அட்டக்கத்தி’க்கு அடுத்த படத்துல என்னைக் கூப்பிட்டு ரோல் கொடுத்தார். தம்பி சொன்னா அந்த வார்த்தையை காப்பாத்துவார்… சக மனிதர்கள்கிட்டயும் நல்லா பழகுவார்.”