புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் 4 இடங்களில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உ.பி. சுல்தான்பூர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நீல்காந்த் மணி பூஜாரி புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தமிழகத்தின் புதுக்கோட்டைடை சேர்ந்த ராஜ் முகம்மது (22) என்பவரை கைது செய்திருந்தனர். தற்போது லக்னோ ஏடிஎஸ் படை காவலில் ராஜ் முகம்மது இருக்கிறார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏடிஎஸ் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த 2018 முதல் 2021 வரையில் ராஜ் முகம்மது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவிலும் பின்னர் எஸ்டிபிஐ.யிலும் இணைந்துள்ளார். ஹிஜாப் பிரச்சினைக்காக கர்நாடகா, கியான் வாபி மசூதிக்காக உ.பி. ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்’’ என்றனர்.
ராஜ் முகம்மது, 15 வாட்ஸ்அப் குழுக்களை நடத்தி வந்துள்ளார். இதில் லெபனான், சவுதி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்த குழுக்கள் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை அறிய ராஜ் முகம்மதின் கைப்பேசி, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.