திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதால், சங்க முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரின் அசையா சொத்துகளை ஏலம் விட கூட்டுறவுத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிராம அளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு, நகைக் கடன் மற்றும் பயிர்க் கடன் உள்ளிட்ட பிற கடன்கள் வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்குதல் ஆகிய பணிகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று செலுத்தாத பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தான் பெரும்பாலானோர் அறிந்திருப்பர். ஆனால், சங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழியர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அசையா சொத்துகள் ஏலம் விடப்படுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தச்சங் குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2019-20 நிதியாண்டில் சங்கத்துக்கு பல்வேறு வகைகளில் ஏறத்தாழ ரூ.1.5 கோடி அளவுக்கு நிதிஇழப்பை ஏற்படுத்தியது ஆண்டுத் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய அந்த சங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர்களின் அசையா சொத்துகளை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு நிதி இழப்பை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் துறை தற்போது எடுத்துள்ளது. அதன்படி, இந்த சங்கத்தின் முன்னாள் முதுநிலை எழுத்தரும், செயலாளர் பொறுப்பு வகித்தவருமான ஆர்.ராஜேஷ் கண்ணன், முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி.நடராஜன், த.கஜேந்திரன், ஆர்.அமுதா, ந.கிருஷ்ணன், பி.ராஜேஸ்வரி, வி.சாந்தி, க.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெயரில் உள்ள அசையா சொத்துகள் ஜூலை 15-ம் தேதி பகிரங்க ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பை கூட்டுறவுத் துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2019-20-ம் நிதியாண்டில் நகைக் கடன், அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் முறைகேடுகள் செய்து, சங்கத்துக்கு ஏறத்தாழ ரூ.1.5 கோடி இழப்பீடு ஏற்படுத்தியது தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க விதி 81-ன் கீழ் தொடர்புடையவர்களிடம் அறிக்கை கோரப்பட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், நிதி இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், சங்க ஊழியரை பணியிடை நீக்கம் செய்தும், சங்க நிர்வாகக் குழுவை கலைத்தும், குற்றவியல் வழக்குத் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், சங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்திய தொகையை மீட்கும் வகையில், இழப்பு ஏற்படுத்தியவர்களின் அசையா சொத்துகளை பற்றுகை செய்து, ஜூலை 15-ம் தேதி பகிரங்க ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டு நிதி இழப்பை ஏற்படுத்தும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் மீது வழக்கு தான் தொடரப்படும். இதுபோன்று அவர்களது அசையா சொத்துகளை ஏலம் விடுவதற்கு சட்டத்தில் இடமிருந்தும், அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் அரிதாக தான் நடைபெறும் என்கின்றனர் ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரிகள்.