காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குச் செல்ல ரமேஷ், நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பேருந்துக்காக அவர் காத்திருந்தபோது, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரமேஷ் அருகில் வந்தார். எங்கு செல்ல வேண்டும் என அந்தப் பெண் விசாரித்தார். அதற்கு ரமேஷ், ஊருக்குச் செல்ல காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ரமேஷிடம், சந்தோஷமாக இருக்கலாமா என்று அந்தப் பெண் கேட்டுள்ளார்.
அதைக்கேட்ட ரமேஷின் மனதில் சபலம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணிடம், போலீஸ் பிரச்னை வருமே என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், எனக்கு தெரிந்தவரின் வீடு தாம்பரத்தில் உள்ளது. அங்குச் செல்லாம் என கூறியதோடு ஒரு நாள் இரவுக்கு என ரேட்டும் பேசியுள்ளார். அதற்கு சம்மதித்த ரமேஷ், அந்தப் பெண்ணுடன் தாம்பரம் செல்ல பேருந்தில் ஏறினார். தாம்பரத்தில் பேருந்தை விட்டு கீழே இறங்கிய இருவரும் ஒரு வீட்டின் முன் போய் நின்றிருக்கின்றனர்.
அந்தப் பெண் ஒருவீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்ததும் இருவரும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கு மூன்று பெண்கள் இருந்துள்ளனர். அதைப்பார்த்ததும் ரமேஷ், சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். ஆனால், நான்கு பெண்களும், ரமேஷ் தப்பிச் செல்லவிடாமல் தடுத்ததோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ரமேஷ் சத்தம் போடாமலிருக்க அவரின் வாயையும் பொத்தியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்கள்,ரமேஷிடமிருந்து பணம், ஏடிஎம் கார்டுகளை பறித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்தால், நாங்கள் உன் மீது புகாரளிப்போம் என மிரட்டி அனுப்பியுள்ளனர். தாம்பரத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த ரமேஷ், தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ரமேஷ் கூறிய தகவலின்படி தாம்பரத்தில் குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அங்கு யாருமில்லை.
ரமேஷிடம் பணம் பறித்த பெண்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியை போலீஸார் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், “புகாரளித்த ரமேஷிடம் பேசிய பெண்,யாரென்று சிசிடிவி மூலம் தேடிக் கொண்டிருக்கிறோம். மேலும், தாம்பரத்தில் ரமேஷ் சென்ற வீட்டில் தங்கியிருந்த பெண்கள் குறித்தும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் ரமேஷிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏடிஎம் கார்டை யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் கோயம்பேடு பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.