பான் இந்தியா படமாகிறது ராம் : 2 பாகங்கள் உருவாகிறதா ?
மலையாள திரையுலகில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணி என்பது ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு கூட்டணியாக மாறிவிட்டது. குறிப்பாக சமீப காலத்தில் வெளியான திரிஷ்யம் 2 மற்றும் ட்வல்த் மேன் ஆகிய படங்களின் வெற்றியும் இந்தப்படங்களை ஜீத்து ஜோசப் உருவாக்கியிருந்த விதமும் தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகிவரும் ராம் என்கிற படத்தின் மீது அதிகபட்ச எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் இந்தப்படத்தின் கொடுத்தல் சிறப்பம்சம்.
சொல்லப்போனால் இந்த இரண்டு படங்களுக்கு முன்னதாகவே ராம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு பாதி நடைபெற்றது. வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து மீண்டும் வரும் ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப்படம் தற்போது பான் இந்தியா படமாக தயாராகிறது என்றும் அனேகமாக புஷ்பா, கேஜிஎப் படங்களைப் போல இந்த படத்திற்கு இரண்டாம் பாகமும் உருவாக்கும் விதமாக இதன் கதை அமைப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் மாற்றம் செய்துள்ளார் என்றும் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ற வகையில் பான் இந்திய நடிகர் ஒருவரும் இந்தப்படத்தில் விரைவில் இணையவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல ஏற்கனவே ஒரு பேட்டியில், தான் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிக பிரம்மாண்டமான படமாக ராம் இருக்கும் என ஜீத்து ஜோசப் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே மைண்ட் கேமை மையப்படுத்தி தான் உருவாகி இருந்தது. ஆனால் இந்த படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகி வருகிறது என்றும் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.