குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. பாஜக கூட்டணியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர். டெல்லியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த திரௌபதி முர்முவுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆதரவு தருவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக-வோடு இணங்காமலும், எதிர்க்கட்சிகளின் அணியிலும் சேராமல் தனித்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி, `குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு’ என அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த மாயாவதி, “பழங்குடி சமூகம், கட்சியின் ஓர் அங்கமாக இருப்பதை மனதில் வைத்து, வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு ஆதரவளிக்கப் பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஓர் பழங்குடிப் பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்பதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவு. அதுமட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான முடிவுகளைத் தான் நாங்கள் எடுக்கிறோம். பட்டியலினத்தவருக்குத் தலைமை தாங்கும் ஒரே தேசிய கட்சி என்றால் அது பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் தான். நாங்கள் பா.ஜ.க அல்லது காங்கிரஸைப் பின்பற்றும் கட்சியுமல்ல, தொழிலதிபர்களுடன் தொடர்புடைய கட்சியுமல்ல. ” எனக் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்த மாயாவதி, “முதல் ஆலோசனைக் கூட்டத்துக்கு சில தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே மம்தா அழைத்தார். அடுத்து சரத் பவாரும் பகுஜன் சமாஜ் கட்சியை கூட்டத்துக்கு அழைக்கவில்லை. இவர்கள், எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி செய்வதாக வெறும் பாசாங்கு மட்டுமே செய்கின்றனர்” என்று சாடினார்.