Novel agitation by coconut farmers in Pattukkottai: தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக தேங்காய்களை தரையில் போட்டு உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் தேங்காய் காய்க்க தொடங்கிய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் இந்த தேங்காய் உடைக்கும் போராடடத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: வாகனச் சோதனையில் ரூ46,300 பறிப்பு: வல்லம் ஸ்பெஷல் எஸ்.ஐ மீது புகார்
தென்னை விவசாயிகள் சங்கம், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கங்கள் சார்பில் விவசாயிகள் சங்க தலைவர்கள் வழக்கறிஞர் ஆர்.ராமசாமி, பா.பாலசுந்தரம், ச.கந்தசாமி, சி.கந்தசாமி, சோ.பாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் சிலை முன்பு தேங்காய்களை தரையில் போட்டு உடைத்தனர்.
முன்னதாக பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கம் காந்தி சிலையில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும், பல கோடி செலவில் பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள தென்னை வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆர்.சி.பழனிவேல், விவசாய சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சோ. பழனிவேல், தென்னை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்