தருமபுரியில் சூழல் பூங்காவைப்போல் மாற்றப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட தினமும் ஏராளமானவர்கள் வருகை புரிந்து வருகின்றனர். விருந்தினரைபோல மூலிகை டீ, ஐஸ்கிரீம் கொடுத்து ஊழியர்களும் உபசரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும், தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், முன்பு கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தது. இந்த அலுவலகம் மூலம் இரு மாவட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான பணிகள் நிர்வகிக்கப்பட்டன. பின்னர் 2016-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்துக்கென தனி அலுவலகம் பிரிக்கப்பட்டு தருமபுரியில் அப்பாவு நகர் பகுதியில் தற்காலிகமாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், அதியமான்கோட்டை புறவழிச் சாலையில் ஏ.ரெட்டிஅள்ளி ஊராட்சி பகுதியில் சோககத்தூர் அருகே மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கென புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2021 நவம்பர் முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. இதில் 33 சென்ட் பரப்பளவு கொண்ட வளாகத்தில் அலுவலகங்களுக்கென 2500 சதுர அடி பரப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் காலியிடங்கள் முழுவதும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளராக பணியாற்றும் சாமுவேல் ராஜ்குமார் முயற்சியால், ஊழியர்களின் ஒத்துழைப்போடு இயற்கை சூழலை ஏற்படுத்த பல வகையான மரங்கள் அதாவது நிழல், கனி, பலன் தரக்கூடிய மரங்களை வைத்து சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
ஒருபுறம் நொச்சி, சிறியா நங்கை, கருந்துளசி, சீனித்துளசி உள்ளிட்ட மூலிகைச் செடிகள் தோட்டம். மற்றொருபுறம் வாழை, கொய்யா, நெல்லி, அத்தி, மா, பலா, சீத்தா, கொடுக்காப்புளி, கடுக்காய் என பழ மரத்தோட்டம். அலுவலக முகப்பில் புல் தரையுடன் கூடிய மலர் மற்றும் அலங்கார தாவரங்கள் அமைக்கப்பட்டு சிறிய பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. மறுபுறம் வாகன நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் கூண்டுகளில் புறா, நாட்டுக்கோழி, வாத்து, முயல், காதல் பறவைகள் போன்ற வளர்ப்பு உயிரினங்கள்.
இவைதவிர, பிரதான சாலையில் இருந்து அலுவலகம் வரை செல்லும் சாலையை ஒட்டி இருபுறமும் நாட்டு ரக மரக்கன்றுகள். அதேபோல, அலுவலக மதில் சுவரை ஒட்டிய காலியிடத்தில் வலது மற்றும் இடது புறங்களில் மூன்றடுக்கு வரிசையில் நாட்டு ரக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் இங்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை பறித்து, வாரந்தோறும் புதன் கிழமைகளில் சமையல் செய்து, வேற்றுமை இல்லாமல், அனைத்து நிலை ஊழியர்களும் சமமாக அமர்ந்து உண்டு மகிழ்கின்றனர். மேலும் அலுவலக பணியாக வருபவர்களும் இந்த விருந்தில் இணைந்து மகிழ்கின்றனர். இவையனைத்தும் சேர்ந்து இந்த அலுவலக வளாகத்துக்கு ஒரு சூழல் பூங்கா போன்ற தோற்றத்தை உருவாக்கித் தந்துள்ளது. இவையனைத்தும், கடந்த 6 மாத காலங்களில் உண்டாக்கப்பட்ட மாற்றங்கள்.
இவைமட்டுமன்றி பொருளாசையின் தீமைகள், அன்பின் பலம், அறிவுத் தேடலின் முக்கியத்துவம், அறத்தின் வலிமை, சூழலின் அவசியம் போன்றவற்றை ‘நறுக்’கென உணர்த்தும் வகையிலான வாசகங்களும், தலைவர்களின் பொன்மொழிகளும் அலுவலக சுற்றுச் சுவர் மற்றும் உட்பகுதி சுவர்கள் என பல இடங்களிலும் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மேலும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி, உரிமம் புதுப்பிப்பு, சூழல் பிரச்சினைகள் தொடர்பான புகார் போன்ற தேவைகளுக்கானவர்கள் மட்டுமே இந்த அலுவலகத்தை நாடும் நிலை மாறி, மேற்கண்ட சூழலால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து பார்வையிட்டு, ரசித்துச் செல்லும் இடமாக மாறியிருக்கிறது சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம். அலுவலகத்தை நாடி வரும் அனைவரும் 10-க்கும் மேற்பட்ட மூலிகை பொடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை பருகாமல் செல்ல முடிவதில்லை. கந்த பூங்காவை கண்டு ரசிக்க வரும் குழந்தைகளுக்கு மட்டும் பிரத்தியேக ஐஸ் க்ரீம் உபசரிப்பு வழங்கப்படுகிறது.
மேலும், மாவட்ட அரசுப் பள்ளிகளின் 600 ஆசிரியர்களுக்கு சூழல் முக்கியத்துவம் குறித்து இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்திற்காக வரும் உரிமையாளர்களிடம், சுற்றுச்சூழலை பாதுகாக்க, இயற்கை சூழலை ஏற்படுத்தி மரம், பூங்கா அமைத்தால், மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கறாராக தெரிவிக்கிறார். இந்த அலுவலகத்தை காண வரும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதியிலும் அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, சுற்று சூழல் பூங்காவை வைக்க தொடங்கியுள்ளனர். தற்போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்ட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் பணி, சுற்றுச்சூழலை மாசைடையாமல் பாதுகாப்புதான்.
இந்த பணி நமது அலுவலகத்திலிருந்து முன்மாதிரியாக தொடங்க வேண்டும் என்பதனால், இந்த அலுவலகத்தை சுற்றுச் சூழல் பூங்காவாக மாற்றியுள்ளதாக, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார் தெவித்துள்ளார். இதுப்பபோன்று எல்லா அலுவலகம், தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தால், மாசில்லா தருமபுரியை உருவாக்க முடியும், சுத்தமான காற்று, நல்ல பருவமழை, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM