இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்,
“ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் ஐந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விளக்கமான ஒரு பதிலை கொடுத்துள்ளார். அந்த பதிலை பார்த்து வைத்தியலிங்கம் தெளிவு பெற்றுக் கொள்வது நல்லது.
ஓ பன்னீர் செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் எறியப்பட்ட போது, மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி அதனைக் கடுமையாக கண்டித்தார். மேலும் தொண்டர்களை அமைதிப்படுத்தினார். யாரையும் அவருக்கு அவமதிக்கும் நோக்கம் இல்லை.
வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது. இந்த விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
அவருக்கு எந்த வீண் மன உளைச்சலும் தேவையில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள். அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுத்து வருவது போல், அவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினருடன் ஒத்துப் போய் இருக்கலாம்.
ஆனால் அவர் நீதிமன்றத்தை நாடி விட்டார், தேர்தல் ஆணையத்தை நாடு விட்டார். ஓ பன்னீர்செல்வம் செய்யும் கலகங்களால் அதிமுக தொண்டர்கள் தான் தற்போது மன உளைச்சலில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவை அழிக்க ஒருவன் பிறக்கவே மாட்டான். முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ஜெயக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்தார்.