புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் ரூ.65.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியினை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, அங்குள்ள அப்துல் கலாம் கலையரங்கில் இன்று நடைபெற்றது.
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வரவேற்றார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைத்து அர்பணித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா பேசியது:
‘‘பொது சுகாதாரத் துறையில் நாடு மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது. இன்று, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். புதுச்சேரி ஜிப்மர் வளாகத்திலிருந்து பொது சுகாதார சர்வதேசப் பள்ளியை தேசத்துக்கு நாம் அர்ப்பணிக்கிறோம்.
இந்த மையம், மருத்துவக் கல்வி மற்றும் மேம்பட்ட சுகாதாரப் பயிற்சியையும் வழங்கும். இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். மத்திய அரசு கரோனா போருக்கு எதிராக மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் நாடு கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது.
உலகளவில், கரோனா நோய் தடுப்பு மேலாண்மையை நாம் சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். இந்த சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி, பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த கல்வியை வழங்கும் நோக்கத்துடனும், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், மருத்துவத் துறை தலைவர்களை உருவாக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டது. கூடுதலாக, சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்த உதவும்.’’என்றார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘‘சர்வதேச பொதுசுகாதார கல்வி நிறுவனம், மருத்துவத் துறையில் நம்முடைய முயற்சிகளை மேலும் வளர்ததுக் கொள்ள உதவும். நம்முடைய கண்டுபிடிப்புகளும், புதுமையான அணுகுமுறைகளும் மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய உதவி செய்யும்.
குறிப்பாக, பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். மருத்துவச் சிகிச்சை செலவிற்காக மக்கள் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பாரதப் பிரதமரின் அறிமுகப்படுத்திய போது, 90 நாட்களுக்குள்ளாகவே 60 ஆயிரம் நோயாளிகள் இருதய சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அவசியத்தை அது தெரிவிக்கிறது. இந்த சர்வதேச பொதுசுகாதாரக் கல்வி நிறுவனம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மக்களை சென்றடைய உதவும் என்று நம்புகிறேன். முதல்வர் குறிப்பிட்டதைப் போல ஜிப்மரிலும் சில குறைபாடுகள் இருக்கிறது. ஒரு நிறுவனம் என்று இருந்தால் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த குறைபாடுகள் – மருந்துகளின் கையிருப்பு, போதிய மருத்துவர்கள் போன்றவை சரி செய்யப்பட வேண்டும்.
நம்முடைய சேவை சிறப்பானதாக இருக்க வேண்டும். நான் துணைநிலை ஆளுநராக புதுச்சேரிக்கு வந்தபோது வெறும் 4.000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்று 17 லட்சம் தடுப்பூசிகளாக உயர்ந்திருக்கிறது.’’என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘உலக புகழ்பெற்ற மருத்துவமனையாக புதுச்சேரி ஜிப்மர் இருப்பதை அறியும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சர்வதேச பொது சுகாதார பள்ளி திறக்கப்பட்டிருப்பது ஜிப்மரின் அடுத்து ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.
ஜிப்மரில் படித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுவது என்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஜிப்மர் சிறந்த மருத்துவ வசதிகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஜிப்மரில் சிறு சிறு குறைகள் இருந்து கொண்டிருக்கிறது.
மேலும் விரிவான நிலையில் அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற நிலையில் ஜிப்மர் பணியாற்ற வேண்டும். ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்ற நோயாளிகளுக்கு மிகவும் பயன்னுள்ள வகையில் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.
சில நோய்களுக்குரிய மருத்துவ சிகிச்சை என்பது காலம் தாழ்த்தாமல் கிடைக்க வேண்டும் என்பது எனது எண்ணம். சில நோய்கள் உடனடியாக கவனித்து குணப்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதும் நாம் அறிந்தது. அந்த வகையில் அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை கிடைக்கின்ற நிலையில் ஜிப்மர் மருத்துவமனை சேவை செய்ய வேண்டும்’ ’என்றார்.
தொடர்ந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜிப்மர் பேராசிரயர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மத்திய அமைச்சர் விழாவில் நடுவில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து: ஜிப்மரில் நடைபெற்ற விழாவின் தொடக்கத்தில் தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
இது குறித்து விழாவுக்கு பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜிப்மரில் நடந்த விழாவில் தன்வந்திரி வாழ்த்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், பாடவில்லை.
இதுகுறித்து கேட்டபோது நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை என்றார்கள். ஆனால், எல்லா விழாக்களிலும் நம்முடைய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் இருக்க வேண்டும். நாம் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதை போல் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக வைத்தேன். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
இனி ஜிப்மரில் உள்ள எல்லா கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவிர்த்து விடக்கூடாது என்று சிறிது காலதாமதம் ஆனாலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க சொன்னேன். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்காமல் எந்த நிறுவனமும் இருக்காது என்று எங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டு உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.