கொல்கத்தா மருத்துவமனையில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி மரணம்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில் சுஜித் அதிகாரி என்பவர் சிகிச்சைக்காக நோயாளியாக சேர்க்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், 8வது மாடியில் உள்ள தனது வார்டின் ஜன்னல் வழியே வெளியேறி கட்டிடத்தின் முன்பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அனைவரும் அந்த நபரை கீழே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் யாரையும் அவர் அருகே நெருங்க விடவில்லை.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்த கூடிய பெரிய ஏணி ஒன்றை கொண்டு வந்து அவரை கீழே இறக்கும் முயற்சி நடந்தது. ஆனால், ஒவ்வொரு முறை ஏணியை சுஜித்துக்கு அருகே கொண்டு சென்றபோது, அவர் கீழே குதிக்க முயன்றுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை பார்த்து அழுதுள்ளனர்.

இந்த நிலையில், மதியம் 1.10 மணியளவில் 8வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்து உள்ளார். அவர் தரையை அடைவதற்கு முன்பு, 2 முறை சுவரில் மோதியுள்ளார். இதில், அவரது தலை, இடுப்பு மற்றும் இடது கை பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

அவர் 8வது மாடியில் அமர்ந்து இருந்தபோது, மருத்துவமனை வெளியே பலர் திரண்டுள்ளனர். அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால், சுஜித் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சீருடை அணிந்த யாரையும் நெருங்க விடவுமில்லை.

இந்நிலையில், கீழே குதித்த சுஜித்தின் நிலைமை மோசமடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜித் அதிகாரி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.