மும்பை: ‘தென்னிந்திய படங்கள் ஓடுவதை ஆராய்வது பயனற்றது’ என்று கருத்து கூறியுள்ளார் நடிகர் மாதவன்.மாதவன், சிம்ரன் நடித்துள்ள ‘ராக்கெட்ரி்: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படம் வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்திருப்பதுடன் இப்படத்தையும் மாதவன் இயக்கியுள்ளார். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் வசூலைக் குவித்து வருவது குறித்து மாதவனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தென்னிந்தியப் படங்கள் திடீரென்று நன்றாக ஓடுவதாக கூறுகிறார்கள். மாற்றம் என்பது அடிக்கடி நடக்கும் விஷயம் கிடையாது. திடீரென்று எப்போதாவது இதுபோல் நடக்கும். இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. ரசிகர்கள் தங்களது ரசனையைப் பரந்து விரிந்த நிலையில் வைத்துக்கொள்கிறார்கள். தென்னிந்தியப் படங்கள் ஓடுவதால், பாலிவுட் படங்கள் ஓடவில்லை என்று அர்த்தம் கிடையாது. ‘கங்கு பாய் கத்தியவாடி’, ‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘புஹ்ல் புலய்யா 2’ ஆகிய இந்தி படங்களும் நல்ல வசூலை ஈட்டி யுள்ளன. பான் இந் தியா என்ற சொற்றொடர் தேவையானதாக இருக்கவில்லை. இந்தியாவில் உருவாகும் எல்லாப் படங்களும் இந்தியர்களுக்கானது. அதனால், தனியாக அதை பான் இந்தியா என்று முத்திரையிட தேவையில்லை. இந்தி படங்களை போல் அதிக நாட்கள் ஓடிய படங்கள் குறைவுதான். இவ்வாறு அவர் கூறி னார். மாதவன் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியானாலும், இந்தப் படத்தின் வியாபாரம், இந்தி சினிமாவை நம்பியே உள்ளது. இதனால்தான் மாதவன் இந்தி சினிமாவை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.