உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை – இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை.களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 25-ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 30-ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி, இத்திட்டத்தில் பயன்பெற உள்ள மாணவிகள் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு உயர்கல்வி துறைச் செயலர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

மாணவிகளின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களைப் பயன்படுத்தி, கல்லூரிகள் மூலமாகவும், மேற்கண்ட இணையதளம் மூலமாகவும் மாணவிகள் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல், அவர்களது படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.