தூத்துக்குடி/சென்னை/புதுடெல்லி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1,382 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் 10-க்கும் குறைவானவர்களுக்கே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்தது.
இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் பயிலும் 200 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 30 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அனைவரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் உட்பட 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 607 பேர்
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 759, பெண்கள் 623 என மொத்தம் 1,382 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 607 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 66,872-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 22,169 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 617 பேர் குணமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் 6,677 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,026-ஆக உள்ளது.
15,940 பேருக்கு தொற்று
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,940 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,33,78,234-ஆகவும், மொத்த உயிரிழப்பு 5,24,974-ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,495 அதிகரித்து, 91,779-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,27,61,481 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 4.39 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 3.30 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 196.94 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.