புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். ஆனால் அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமம், இதுவரையில் மின்சார வசதியைக் கூட பெறாத நிலையில் உள்ளது.
குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். திரவுபதி முர்முவின் அண்ணன் பகத் சரண் துடுவின் மகன் பிராஞ்சி நாராயண் துடு அந்த கிராமத்தில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தின் மக்கள் தொகை 3,500-ஆக உள்ளது.
இந்த கிராமம் படாசாஹி, துங்கிரிசாஹி என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திரவுபதி முர்முவின் உறவினர்கள் துங்கிரிசாஹி பகுதியில் உள்ள குசுமி பிளாக்கில் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தில் படாசாஹி பகுதிக்கு மின்சார வசதி உள்ளது.
ஆனால் துங்கிரிசாஹி பகுதியில் மட்டும் மின்சார வசதி இல்லை. இந்தப் பகுதிக்கும் மின்சார வசதியை செய்து தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரி வருகின்றனர்.