சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் விஜயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தீசி தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எழும்பூரில் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிலேஷ் என்பவர் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரிடம் இருந்த பைகளில் ரூ. 94 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சென்னையில் தங்க நகைகள் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக அவர் கூறியதாக தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM