வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1973-ம் ஆண்டு ரோ வெர்சஸ் வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பன உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், மிசிசிபி மாகாண அரசு 2018-ல் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மிசிசிபி மாகாண அரசின் சட்டம் ரோ வெர்சஸ் வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், 6 நீதிபதிகளின் ஆதரவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 25 மாகாண அரசுகள் கருக்கலைப்புக்கு உடனடியாக தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாகாணமாக மிசவுரி கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியுள்ள 13 மாகாணங்களில் தானாகவே அது அமலுக்கு வரும்.
இந்தத் தீர்ப்பை ஒரு தரப்பினர் குறிப்பாக குடியரசு கட்சியினர் வரவேற்றுள்ளனர். அதேநேரம் மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறையற்ற மற்றும் பலாத்காரம் உள்ளிட்டவற்றால் உருவாகும் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவருமான ஜோ பைடன் கூறும்போது, “அமெரிக்கர்களின் அரசியல் சாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் துக்ககரமான நாள்” என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, “இது அத்தியாவசிய சுதந்திரத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கை” என்றார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “கருக்கலைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பின்னோக்கி செல்வதற்கான மிகப்பெரிய நடவடிக்கை. பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டவன். இதில் நான் உறுதியாக நிற்கிறேன். இதற்கான சட்டங்கள் பிரிட்டனில் உள்ளன” என்றார்.