நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் டெல்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. உருமாறிய கொரோனா தொற்று பாதிப்புகளும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தொற்றுகளை விட இவை வேகமாக பரவும் என கூறப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா பாதித்து அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். அதிக தொற்று காணப்படும் பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 3 அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்டோரை கொண்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்று அல்லது 2 பேர் பாதிக்கப்பட்டாலும் அந்த பகுதிகளை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக, டெல்லியில் கட்டுப்படுத்த மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 200க்கும் குறைவாக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் 322ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது சோதனைகளை அதிகரிப்பது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.