தாகா: வங்கதேசத்தின் மிக நீண்ட பாலமான ‘பத்மா’ பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6.15 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதியாக பார்க்கப்படுகிறது.இரண்டு அடுக்குகளை உடைய இந்த பாலத்தின் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் கீழ் பகுதியில் ரயில்களும் இயக்க முடியும். இந்தப் பாலத்துக்கான தூண் 400 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக ஆழத்தில் பாலத் தூண் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. பல்வேறு பொறியியல் சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.
”இது வெறும் கற்களாலும் சிமென்டாலும் கட்டப்பட்ட பாலமல்ல. இது நம் நாட்டின் பெருமை கவுரம் திறமையை உணர்த்தும் சின்னமாக அமைந்துள்ளது” என ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.இந்த பிரமாண்ட பாலம் திறப்பு விழாவுக்கு இந்தியா பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.முன்னதாக சீனாவின் சாலை திட்டத்தின் கீழ் சீனாவின் நிதியுதவியுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை வங்கதேசம் மறுத்துள்ளது. முழுக்க முழுக்க சொந்த நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக வங்கதேச அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
Advertisement