புதுடில்லி: புதுச்சேரி கடற்கரையில் குவியும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டத்தை மக்கள் துவக்கி உள்ளனர் என பிரதமர் மோடி இன்றைய ரேடியோவில் பாராட்டி பேசினார்.
அவசர நிலை
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 1975 ல் அவசர நிலை பிரகடனம் செய்த போது மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள், அரசியலமைப்பு அமைப்புகள், பத்திரிகைகள் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சென்சார் கடுமையாக்கப்பட்டதுடன், தங்கள் அனுமதித்த செய்திகளை மட்டும் வெளியிட செய்தனர்.
நம்பிக்கை
பிரபல பாடகர் கிஷோர் குமார் அரசை புகழ்ந்து பாட மறுத்ததால், அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ரேடியோவில் பாட அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு முயற்சிகளை தாண்டியும், ஆயிரகணக்கானோர் கைது செய்யப்பட்டனர், லட்சகணக்கானோர் மீது அடக்குமுறை கட்டவிழத்துவிடப்பட்டது. ஆனால், ஜனநாயகத்தின் மீதான இந்தியர்களின் நம்பிக்கையை அவர்களால் அசைத்து விட முடியவில்லை.
மறக்கக்கூடாது
இந்திய மக்கள் ஜனநாயகத்தை தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகத்தை மீண்டும் நிறுவினர். இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் அவசர நிலையில் இருண்ட காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து பெற்ற விடுதலையை மட்டும் கூறவில்லை. சுதந்திரத்திற்கு பிறகான பயணத்தையும் கூறுகிறது.
விண்வெளித்துறை
நமது நாட்டில் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று இன்-ஸ்பேஸ் என்ற அமைப்பை உருவாக்கியது. இது விண்வெளிதுறையில் தனியார் துறைக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியது. சில ஆண்டுகள் வரை விண்வெளி துறையில் ஸ்டார்ட் ஆப்கள் குறித்து யாரும் சிந்தித்து கிடையாது. ஆனால், இன்று நூற்றுக்கணக்கானவை உள்ளன. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இரண்டு ஸ்டார்ட்ட ஆப்கள் உள்ளன. அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட் ஆகியவை, விண்ணிற்கு ஏவும் வாகனங்களை தியாரித்துவருகின்றன.
சாதனை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் போன்று பல சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. பல விளையாட்டு வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் முன்னுதாரணமாக உள்ளார். கேலோ இந்தியா போட்டிகளில் பல்வேறு சாதனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தங்களது வாழ்க்கையில் வறுமையை சந்தித்த அவர்கள், போராடி வெற்றி பெற்றுள்ளனர். வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். ஏற்கனவே படைக்கப்பட்ட 12 சாதனைகளை முறியடித்தனர். அதில் 11 பேர் பெண்கள். இந்த தொடரில் இந்தியாவில் தனித்துவமான 5 போட்டிகள் சேர்க்கப்பட்டன.
பெருமை
பின்லாந்தில் நடந்த பாவோ நுர்மி விளையாட்டு போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்றுள்ளார். தனது முந்தைய சாதனையை உடைத்துள்ளார். குவோர்டேன் விளையாட்டில் மீண்டும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தூய்மை பணி
மிசோரம் தலைநகர் அயிஸ்வாலில்’சைட் லுயி’ நதி உள்ளது. அசுத்தம் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டு கிடந்தது. இந்த நதியை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. உள்ளூர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து நதியை காப்பதற்கான திட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிதிக்கரைகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாலித்தின்களை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டது.
கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள புதுச்சேரியை பார்வையிட ஏராளமான மக்கள் வருகின்றனர். அதேநேரத்தில், அவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் உருவான மாசுபாடு அதிகமாக இருந்தது. இதனால், தங்களது நதி, கடற்கரை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மறுசுழற்சி திட்டத்தை துவக்கி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.