அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சற்று முன்னதாக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை.
என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது.? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் தொண்டர்கள் உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.