நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்

காளஹஸ்தி: நடுரோட்டில் இளம்பெண்ணை கல்லால் தாக்கியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொன்று ஏரியில் சடலத்தை வீசிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவரது மனைவி மோகனா என்கிற ரோஜா(23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு பிரகாஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ரோஜாவை துன்புறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி கணவருடன் கோபித்துக்கொண்டு ரோஜா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் அறிவுரையால் கடந்த 17ம்தேதி பிரகாஷ் வீட்டிற்கு திரும்பினார். அன்று மாலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ரோஜா தனது தாய் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரகாஷ், தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்று ரோஜாவை வழிமறித்து நிறுத்தினார். நடுரோட்டிலேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அங்கிருந்த கருங்கல்லால் ரோஜாவை சரமாரி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பி விட்டார். மறுநாள் அவ்வழியாக சென்றவர்கள் ஏரியில் பெண் சடலம் மிதப்பதை கண்டு, சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏரியில் மிதந்த ரோஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான பிரகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் பிரகாசை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. பிரகாசுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.