செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்திருக்கிறது அகிலி. இந்த கிராமத்தில் சுமார் 30 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மக்கள் 7 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இருட்டில் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். நீர்பிடிப்பு பகுதியில் ஆறு குடும்பங்களாக வாழ்ந்து வந்தவர்கள், ஏழு வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் குடிசைகள் எழுப்பி வசித்து வருகின்றனர். 6 குடும்பங்களாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கு இன்று திருமணமாகி குழந்தைகள் பிறந்து முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக குடிசைப்போட்டு வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் 28 பேர் இருக்கின்றனர். மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடிப்படை வசதிகளுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் பழங்குடிகளின் நிலை அறிந்து அகிலி கிராமத்தில் அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம்.
தரையோடு தரையாக ஒட்டிக் கிடக்கும் ஓலை குடிசைகளுக்குள் ஒடுங்கி கிடந்த வள்ளி என்பவர் நம் குரல் கேட்டு வெளியே வந்தார். நம்மிடம் பேசிய வள்ளி, “நாங்க இங்க 7 வருஷமா வாழ்ந்துட்டு வர்றோம். மின்சாரம் இல்லாமல் ரொம்ப சிரமமா இருக்கு. வெயில் காலத்துல வீட்டுக்குள்ள தூங்கவே முடியாது. வாசல்ல தான் படுத்து தூங்குவோம். குழந்தைகளும் எங்ககூடத் தான் படுத்து தூங்குவாங்க. கரண்ட் இல்லாததால வெளிய படுத்து தூங்கும்போது பூச்சுக்கடி ஏற்பட்டு உடம்பெல்லாம் சிவந்து போயிரும்.
இங்குள்ள குழந்தைங்க எல்லாரும் பக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படிக்கிறாங்க. கரண்ட் இல்லாம பிள்ளைங்க படிக்க கஷ்டப்படுறாங்க. ஒரு கிலோ மீட்டர் தொலைவில ஒரு மினி டேங்க் இருக்கு, அந்த டேங்குலதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்துறோம். பல நேரங்களில் டேங்குல தண்ணீர் இருக்காது. இதனால குழந்தைங்க காலைல பள்ளிக்குப் போகும்போது குளிப்பதற்குகூட தண்ணீர் இருக்காது. கரண்ட் இல்லாம வெளியில படுக்குறதால ஒரு முதியவர பாம்பு கடிச்சு மருத்துவமனையில சேர்த்தாங்க. இப்ப அவரு குணமாயிட்டாரு. வெயில் காலத்துல வெளியில படுக்குறதால பகல் வெயில் தாக்கம் தரையில் இருக்கும். தூங்கி எழுந்திரிச்சா தரையில உள்ள சூடு உடம்பெல்லாம் ஏறிடும்” என்று தங்கள் துயரத்தை விவரித்தார்.
எட்டாவது படிக்கும் சிறுமி பவதாரணி, “பொழுது போற வரையும் வாசல உக்காந்து படிப்போம். அப்புறம் சோலார் லைட் வெளிச்சத்துல படிப்போம். சில நல்லவங்க சோலார் லைட் கொடுத்து உதவி செஞ்சாங்க. இன்னும் மழைக்காலம் வந்துட்டா பாம்பு, விஷப் பூச்சுங்க தொல்லை அதிகமா இருக்கும். உசுர கையில பிடிச்சிட்டுதான் இங்க இருக்குறோம்” என்றார்.
அடிப்படை வசதிகளின்றி பரிதவித்துக் கொண்டிருக்கும் இந்த மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, தன்னார்வ அமைப்பு ஒன்று சோலார் பேனல் மூலம் லைட், சார்ஜ்ர் கருவிகளை வழங்கி உதவியிருக்கிறது.
இவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டால் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்க உதவியாக இருக்கும். அதற்காக இந்தப் பகுதி மக்கள் 12 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். (அகிலி கிராமம் 12 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது).
2010-ம் ஆண்டு அப்போதிருந்த வருவாய்க் கோட்டாட்சியர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தில், இந்த ஆறு குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.
இது குறித்து மதுராந்தகம் தாசில்தாரிடம் பேசினோம். “மேய்கால் புறம்போக்கில் பட்டா வழங்குவதற்கான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாதத்துக்கு முன்பு அனுப்பியுள்ளோம். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அகிலி கிராமத்தை நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர். மேய்க்கால் புறம்போக்கு என்பதால் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
இந்தப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டால், அவர்களின் வாழ்க்கை நிலை நிச்சயம் மேம்படும். அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் இந்த விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா அரசு?