காதணி விழா: மொய் நோட்டு இல்லை லேப்டாப் கணக்கு; உடனுக்குடன் ரசீது, மொபைலுக்கு மெசேஜ்; அசத்தல் ஐடியா

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உறவினர்களிடம் பெறப்படும் மொய் பணத்தை எழுதிவைப்பது வழக்கம். மொய் நோட்டு ஒன்றில் மொய் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், குடும்பத்தின் பெயர்களை கூறி மொய் எழுதுவார்கள்.

காலம் மாற மாற காட்சிகளும் மாறும் என்பதுபோல, ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டதன் காரணமாக சமீபகாலங்களில் தென்மாவட்டங்களில் நடக்கும் மொய் விருந்து விழா, திருமணம், காதணி போன்ற விழாக்களில் ஆன்லைன் மூலம் மொய் பெறும் முறை அதிகரித்துவிட்டது.

மொய் பெரும் இடத்தில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் QR Code ஸ்கேனர் கார்டு வைக்கப்பட்டு, செல்போன்கள் மூலம் ஸ்கேன் செய்து நேரடியாக வங்கி கணக்கிற்கு மொய் பணத்தை அனுப்புகின்றனர்.

அதன்படி ராமநாதபுரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்ல காதணி விழாவில் கணினி மூலம் மொய் பணம் பெறப்பட்டது. விழா மண்டபத்தின் ஒரு ஓரத்தில் மூன்று லேப்டாப்கள், பிரின்டர், பணம் என்னும் எந்திரத்துடன் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் அருகிலும் விழா ஏற்பாட்டாளரின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.

மொய் ரசீதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் விருந்தினர்

விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள் மொய் வைக்கும் இடத்தில் அமர்ந்திருந்த விழா ஏற்பாட்டாளரின் உறவினரிடம் மொய் பணத்தைக் கொடுத்தார். அவரது பெயர் விவரம் கேட்டு அறிந்து, அருகில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்த இளைஞரிடம் தெரிவித்து, கணினியில் பதிவு செய்தார். பின்னர் கொடுத்த பணத்திற்கு உடனடியாக ரசீது கொடுக்கப்பட்டு, செல்போன் எண்ணுக்கும் அது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் மூலம் மொய் பெறப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் உறவினரிடம் பேசினோம், “மொய் நோட்டில் பணம் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் ஒரு சில நேரங்களில் விடுபட்டுப்போகின்றன. இதனால் மொய் பணம் எவ்வளவு வந்தது என்பதில் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மொய்ப்பணம் பிரச்னை பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படும். மொய் வாங்கிவிட்டு பெயர் எழுதவில்லை எனத் தெரிந்தால் கலவரம் உண்டாகிவிடும். இதனைத் தடுப்பதற்காக என்ன வழி என்று யோசித்தோம். அப்போதுதான் மொய் விருந்தில் இதுபோன்ற கணினி மூலம் மொய் பெறுவது குறித்து எங்களுக்கு தெரியவந்தது.

லேப்டாப்பில் தனது பெயர் பதிவு செய்வதை பார்க்கும் உறவினர்

இதையடுத்து கணினி மூலம் மொய் பெற்று தருபவர்களை கண்டறிந்து இந்த ஏற்பாடு செய்துள்ளோம். நேரடியாக எங்களிடம் வந்து மொய் கொடுப்பவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்கியும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்தோம். அதேபோல் கவர்களில் மொய் பணம் கொடுத்தவர்களின் பெயர் விவரங்கள் தனியாகக் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொய் எழுதுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் மொய் வரவு, செலவு கணக்கில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும், பொதுமக்களும் இந்த முறையை வரவேற்று, இதேபோல் தங்கள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதன் விவரங்களைக் கேட்டறிந்து சென்றனர்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.