வேழம் விமர்சனம்: நாற்பது நிமிடத்தில் நாலு ட்விஸ்ட்; த்ரில்லரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாங்களா?

தன் உயிருக்கு ஒப்பான காதலியைக் கொன்றவர்கள் யார் என நாயகன் தேடும் பயணமே இந்த `வேழம்’.

சீரியல் கில்லர் ஒருவரின் கொலைகளால் மிரண்டு போயிருக்கின்றனர் மலைக்கிராம வாசிகள். ஒரு வீட்டில் பெண் ஒருத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். சாலையின் ஓரத்தில் இளைஞன் ஒருவனது இறந்துபோன உடலும் கண்டு எடுக்கப்படுகிறது. ஆனால், அதையும் மீறி அந்தக் காட்டில் ஜாலி டிரிப் அடிக்கிறார்கள் காதல் ஜோடிகளான அசோக் செல்வனும், ஐஸ்வர்யா மேனனும். அவர்கள் செல்லும் பாதையை ஒரு வாகனம் வழிமறித்து நிற்க, அந்த வாகனத்தைத் தள்ளி நிறுத்த அசோக் செல்வன் முயல, காணாமல் போகிறார் ஐஷ்வர்யா மேனன். ‘கம்னு இருந்தா உயிரோட இருப்ப’ என்ற குரல் மட்டும் அசோக் செல்வனுக்குக் கேட்கிறது. முகம் மூடப்பட்ட நிலையில் யாரோ அவரைத் தாக்க, ஐஷ்வர்யா மேனன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. சீரியல் கில்லரைத் தேடும் பணி தொடர, ஐந்து ஆண்டுகள் ஓடிவிடுகின்றன.

வேழம்

க்ளீன் ஷேவில் இருந்து கரடு முரடான தாடி லுக்கிற்கு மாறிவிடுகிறார் அசோக் செல்வன். தாடி வைத்திருப்பவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்பதால் அசோக் செல்வனும் உம்மென மாறிவிடுகிறார். அவர் வீட்டுக்கு வருகை தரும் ஜனனி & டீம் எவ்வளவோ முயன்றும் அசோக் செல்வனை யாராலும் மாற்ற முடியவில்லை.

சரி, அடுத்துக் கதை ஆரம்பிக்கும் என நாம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு உட்காரும் பொழுது,’ ஆமா நீங்க ரெண்டு பேரும் எப்படி லவ் பண்ணினீங்க’ எனக் கேட்கிறார் ஜனனி. ‘குருநாதா…’ என மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார் அசோக் செல்வன். அதாவது சிலர் படம் போட்டதற்குப் பிறகு தாமதமாக வருவார்கள் அல்லவா, அவர்களுக்காக மீண்டும் அந்தக் காட்சிகளைக் காட்டும் யுக்தி போல. சிறு வயதிலிருந்தே எப்படி இருவரும் காதலர்களாக வளர்ந்தனர் என்பதைக் காட்டுகிறார்கள். அதன் பிறகு ஐஸ்வர்யா மேனனின் சொந்தங்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விவரிக்கப்படுகிறது. நாமும் நோட்ஸை எடுத்து ஒவ்வொன்றாக எழுதத் துவங்குகிறோம். ஏம்பா இதைக் காட்டுவதுதான் பிளான் என்றால், எதற்கு ஜனனி & டீமை வைத்து ஒரு மணி நேரத்திற்கும் காட்சிகளை அடுக்கினீர்கள் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை.

வேழம்

9 மாதம் பாடமே நடத்தாமல் ஒப்பேற்றிவிட்டு, கடைசி ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த சிலபஸ்ஸையும் நடத்தும் வாத்தியார்கள் போல், படம் முடியும் தறுவாயில் நமக்கு அத்தனை விஷயங்களையும் கொட்டி, போதும் போதும் எனச் சொல்ல வைத்துவிடுகிறது இந்த `வேழம்’.

ஜாலி லுக்கோ, மென் சோக லுக்கோ, இரண்டிலும் தன்னால் என்ன செய்யமுடியுமோ அதைப் பாதகம் இல்லாமல் செய்திருக்கிறார் அசோக் செல்வன். ஐஸ்வர்யா மேனனுக்கு இறந்தபின்னர் வரும் ஃபிளாஷ் பேக் காட்சிகள்தான் அதிகம் என்பதால், நாமும் அவர் இறந்துவிட்டார் என்பதையே மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜனனி, அசோக் செல்வன் கூட்டணியில் ரொமாண்டிக் பாடல் ஒன்று வருகிறது. ஜனனி எவ்வளவோ சொல்லியும் அசோக் செல்வன் அவரின் காதலிக்க மறுக்கே, நமக்கே “அந்த ‘விண்மீன்’ பாடலையாவது ப்ளே பண்ணலாம்ல…” எனச் சொல்ல வைத்துவிடுகிறார்கள்.

வேழம்

படத்தின் பெரும் பிரச்னை அதன் திரைக்கதை. படம் இன்டர்வெல் முடிந்தபின்னும் ஆரம்பிக்க மறுக்கிறது. முதல் காட்சியில் வரும் சில கதாபாத்திரங்கள் எப்படியும் அடுத்து வருவார்கள் என நாம் காத்திருந்து காத்திருந்து நமக்கும் அசோக் செல்வன் அளவுக்குத் தாடி முளைத்துவிடுகிறது. அவர்களைப் படத்துடன் இணைப்பதாக உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் அவ்வளவு செயற்கைத்தனம். வேண்டாத காட்சிகள் ஒருபுறம் அதிகமாகிக்கொண்டே செல்ல, தேவைப்படும் காட்சிகள் அவசரகதியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் வரக்கூடிய எதிர்மறை கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் இன்னும் மோசம். லாஜிக்கே இல்லாமல் அடுத்தடுத்து ட்விஸ்ட் என்னும் ஒற்றைப்புள்ளியில் சுவாரஸ்யத்துக்காக அந்தக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதனாலேயே மருந்துக்குக்கூட அந்தக் காட்சிகளில் நம்பகத்தன்மையில்லை. பாலியல் வன்புணர்வு காட்சிகளை வெறுமனே த்ரில்லர் சுகத்துக்காக இயக்குநர்கள் கையாளாமல் இருப்பது நலம். வலிந்து திணிக்கப்படும் இந்தக் காட்சிகள் மிகவும் மோசமான விளைவுகளையே உருவாக்கும்.

எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல், கடைசி நேர அவசரகதி ட்விஸ்ட்டுகளுடன் தனக்கு ஒருவாறு முடிவுரையை எழுதிக்கொண்டிருக்கிறது இந்த `வேழம்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.