மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடித்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி, அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவிகளிடம் தொலைபேசியில் பேசி வருகிறார்
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவியருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் கணவரிடம் பேசி அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு அவர் சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாகி கவுகாத்தியில் தங்கியுள்ளனர். இதனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரே பலமுறை காணொளியில் பேசி நிலைமையை சரி செய்ய முயன்ற நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் இறங்கி வரவில்லை. இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் மனைவி, அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவிகளை தொடர்பு கொண்டு அதிருப்தியை கைவிட்டு மும்பை திரும்ப தங்கள் கணவரை வற்புறுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு முகமை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அளித்ததன் அடிப்படையில் சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எம்எல்ஏக்களான ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே, பிரகாச் சர்வே உள்ளிட்ட 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அவா்களது குடும்பத்தினருக்கும் இந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. 5 சிஆா்பிஎப் கமாண்டோக்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் பாதுகாப்பு வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM