பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 90-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எமர்ஜென்சி காலத்தின்போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்த உரிமைகளில் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்வு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை அடங்கும். அந்த நேரத்தில் இந்தியாவின் ஜனநாயகம், நாட்டின் நீதிமன்றங்கள், ஒவ்வொர் அரசியல் அமைப்புகளையும் நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பத்திரிகைகள் எல்லாம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. தணிக்கை மிகவும் கடுமையானது. ஒப்புதல் இல்லாமல் எதையும் வெளியிட முடியாது என்ற நிலை இருந்தது. ஜனநாயக வழிமுறைகள் மூலம், இந்திய மக்கள் எமர்ஜென்சியை அகற்றி ஜனநாயகத்தை மீட்டெடுத்தனர். இன்று, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அதை வருங்கால சந்ததியினரும் மறந்துவிடக்கூடாது” எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்க்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.